AR Rahman Concert: ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி.. கேளிக்கை வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்காதவர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்திருந்தார்.
AR Rahman's concert: ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை பனையூர் அருகே ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா இசை நிகழ்வு கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. திரையுலகில் தனது 20 ஆண்டு கால இசை பயணத்தை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் பொறுப்பு ஏசிடிசி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.
ஆனால், நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரை உள்ளே அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. பெரும்பாலான ரசிகர்களை நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏராளமான ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரந்த்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காததால் ஏ.ஆர். ரஹ்மானையும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களையும் வெகுவாக திட்டி தீர்த்தனர்.
நிகழ்ச்சியை முறையாக நடத்த ஏற்பாடு செய்யவில்லை என ஏ.ஆர். ரஹ்மான் மீதும், தொடர்புடைய நிகழ்ச்சி நிறுவனத்தின் மீதும் சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதனால், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்காதவர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்திருந்தார். இதற்கிடையே, நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Sad to see a beautiful concert marred by some unfortunate events. Hope everyone has returned back home safely. We went inside with a group of 10 much early and didn’t have any issues except the delay while coming out #MarakkumaNenjam pic.twitter.com/LF2UWAJgEv
— AB (@ajaybaskar) September 10, 2023
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை பார்க்க விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு கேளிக்கை வரி செலுத்தவில்லை என கூறி மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மொத்த டிக்கெட் விற்பனையில் 10% கேளிக்கை வரியாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்ற நிலையில், அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்பதால் விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Red Card For Actors: நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்