Anjali Patil: ஒரே ஒரு போன் கால்! ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம கும்பல் - நூதன மோசடியில் சிக்கிய ரஜினி பட நடிகை!
பார்சலில் போதைப் பொருள் இருப்பதாக கூறி, நடிகையிடம் ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி பாட்டில்:
பிரபல பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டில், இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு பா.ராஞ்சித் இயக்கத்தில் வெளியான ’காலா' படத்தில் ரஜினியின் இளைய மகனின் காதலியாக நடித்திருப்பார்.
இந்த படத்தில் மிகவும் தைரியமாக பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை அஞ்சலி பாட்டிலை மர்ம கும்பல் ஏமாற்றி ஐந்தரை லட்ச ரூபாயை கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூதன மோசடியில் சிக்கிய அஞ்சலி பாட்டில்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஞ்சலி பாட்டிலுக்கு கூரியர் அலுவலகத்தில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், உங்களுடைய பெயரில் தைவான் நாட்டில் இருந்து பார்சல் ஒன்று வந்திருக்கிறது என்றும் அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறினர். தைவானில் இருந்து கூரியரில் வந்த போதைப் பொருளை சுங்கத்துறையினர் கைப்பற்றி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலே அஞ்சலி பாட்டிலுக்கு மும்பை கிரைம் போலீசார் எனக் கூறிக் கொண்டு ஒருவர் தொடர்பு கொண்டிருக்கிறார். அவர், உங்களது 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்து இருக்கிறது. இதை சரி பார்க்க 92,525 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனை அடுத்து, உடனேயே எதையும் யோசிக்காமல் 92,525 ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்பி இருக்கிறார் நடிகை அஞ்சலி பாட்டில். பின்னர், வங்கி அதிகாரிகள் யாராவது உங்கள் ஆதார் கார்டை வைத்து முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம், அதையும் சரி செய்ய ரூ.4.83 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். அதை உண்மையா? பொய்யா? என்று கூட யோசிக்காமல் ரூ.4.83 லட்சத்தை அனுப்பி உள்ளார் அஞ்சலி பாட்டில்.
இதனை அடுத்து, நடந்த சம்பவம் பற்றி தனது வீட்டின் உரிமையாளரிடம் கூறினார் அஞ்சலி பாட்டீல். இது மோசடியாக இருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் அஞ்சலியிடம் கூறினர். இதனை அடுத்து, நடிகை அஞ்சலி பாட்டில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பார்சலில் போதைப் பொருள் இருப்பதாக கூறி, நடிகையிடம் ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க