Anirudh Ravichander: சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள்..! இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்..எப்போது தெரியுமா?
2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் ரவிச்சந்தர்.
சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் ரவிச்சந்தர். அந்தப் படத்தின் பாடல்கள் அனிருத்தை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. தொடர்ந்து எதிர் நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே ஆகிய படங்களின் பாடல்கள் மூலம் தன்னை கொண்டாட வைத்தார்.
View this post on Instagram
இதன் விளைவு விஜய் நடித்த கத்தி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்தது. தீம் மியூசிக், காதல் பாடல்கள், குத்து பாடல்கள் என வெரைட்டி காட்டிய அவர் தொடர்ந்து அஜித்தின் வேதாளம், விவேகம், ரஜினி நடித்த பேட்ட, தர்பார், அண்ணாத்த, விஜய்க்கு மாஸ்டர், பீஸ்ட், கமல் நடித்த விக்ரம் ஆகிய டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தார். மேலும் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
இன்றைய தேதிக்கு அனிருத் தான் தமிழ் சினிமாவின் பிசியான மியூசிக் டைரக்டர் ஆவார். அவரின் கையில் ஜெயிலர், இந்தியன் 2, அஜித்தின் அடுத்தப்படம் என ஏகப்பட்ட படங்கள் கையில் உள்ளது. மியூசிக் மட்டுமல்லாமல் தனது இசை, பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் அனிருத். இந்த 10 ஆண்டுகளில் அனிருத் பெற்ற வளர்ச்சி என்பது மிகப்பெரியது. அவரின் பாடல்கள் காப்பி என சொல்லப்பட்டாலும் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படுகிறது என்பதே உண்மை.
View this post on Instagram
இந்நிலையில் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆனதையொட்டி அதனை கொண்டாடும் விதமாக அனிருத் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கு ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் : ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர் என பெயரிடப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 1 ஆம் தேதி கோவையிலும், அக்டோபர் 21 ஆம் தேதி சென்னையிலும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி ஹாட் ஸ்டார் செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.