Laapataa Ladies : லாபதா லேடீஸ் படத்தின் கதை திருடப்பட்டதாக பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு..
சமீபத்தில் வெளியாகிய லாபதா லேடீஸ் திரைப்படம் தன்னுடைய படத்தின் பல காட்சிகளை ஒத்திருப்பதாக இயக்குநர் ஆனந்த் மகாதேவன் தெரிவித்துள்ளார்
லாபதா லேடீஸ் (Laapataa Ladies)
நடிகர் ஆமீர் கானின் முன்னாள் மனைவி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியான படம் லாபதா லேடீஸ். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணம் ஆகும் இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிடுவதால் எற்படும் குழப்பங்களும் அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே இப்படம். எளிமையான ஒரு கதையின் வழியாக கிராமப் புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம் , அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் காதலை மிக அழகாக இப்படத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் கிரண் ராவ்.
திரையரங்கத்தை தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகிய இப்படம் பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியாகிய அனிமல் படத்தைக் காட்டிலும் அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது இப்படம். இப்படியான நிலையில் இப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தின் கதையில் இருந்து திருடப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருடப்பட்டதா லாபதா லேடீஸ்?
ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கூங்கட் கே பட் கோல்’. லாபதா லேடீஸ் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இப்படத்தில் இருக்கும் காட்சிகளை ஒத்திருப்பதாகவும் ஒரு சில கதாபாத்திரங்கள் மற்றும் கதைத் திருப்பங்களும் ஒரே மாதிரி இருப்பதாகவும் படத்தின் இயக்குநர் ஆனந்த் மகாதேவன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இரண்டு படங்களையும் பார்த்த நெட்டிசன்கள் லாபதா லேடீஸ் படம் ஆனந்த் மகாதேவனின் படத்தில் இருந்து திருடப் பட்டதாக விமர்சித்து வருகிறார்கள். பிரபல எழுத்தாளர் நிவேதா ஷுக்லா ஆனந்த் மகாதேவனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ” முன்னதாக நான் லாபதா லேடீஸ் படத்தை பாராட்டி எழுதியிருந்தேன் . ஆனால் இப்படம் ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு வெளியான கூங்கட் கே பட் கோல் படத்தை நகல் செய்திருப்பது எனக்கு இப்போது தான் தெரிய வருகிறது.
மற்றுமொறு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் லாபதா லேடீஸ் படத்திற்கு பரவலான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கிய அதே சமயத்தில்தான் ஆனந்த் மகாதேவனின் படம் யூடியுப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு இவர்கள் சொல்லும் அறம் , ஒழுக்கம் எல்லாவற்றையும் தாங்களும் கொஞ்சம் பின்பற்றி இருக்கலாம்” என்று அவர் லாபதா லேடீஸ் படக்குழுவை கடுமையாக திட்டியுள்ளார்.
நான் யாருடைய கதையையும் திருடவில்லை..
இது குறித்து கருத்து தெரிவித்த லாபதா லேடீஸ் படத்தின் கதையாசிரியர் கோஸ்வாமிதான் ஆனந்த் மகாதேவனின் படத்தைப் பார்த்தது இல்லை என்றும் இந்த கதையைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதத்தைப் பற்றி தான் தனது கல்லூரி காலங்களில் படித்து தெரிந்துகொண்டதாகவும் தன்னுடைய கதை , திரைக்கதை , வசனங்கள் அனைத்தும் யாரையும் பார்த்து எழுதப்படவில்லை அவை தான் சொந்தமாக எழுதியவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தான் படித்த சத்யஜித் ராய் திரைப்பட கல்லூரியில் இன்னொருவரின் படைப்பை பார்த்து திருடும் அறமற்ற செயலை தனக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.