Alia Bhatt: வீட்டுக்குள்ளேயே கேமரா வைப்பீங்களா? வெளியான புகைப்படம்: கொதித்தெழுந்த ஆலியா பட்..! நடந்தது என்ன?
அனுமதி இல்லாமல் வீட்டில் இருந்த தன்னை 2 நபர்கள் பக்கத்து வீட்டில் இருந்து புகைப்படம் எடுத்ததாக நடிகை ஆலியா பட் குற்றம் சாட்டியுள்ளார்.
அனுமதி இல்லாமல் வீட்டில் இருந்த தன்னை 2 நபர்கள் பக்கத்து வீட்டில் இருந்து புகைப்படம் எடுத்ததாக நடிகை ஆலியா பட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் என்னிடம் விளையாடுகிறீர்களா?” என மிகுந்த அதிருப்தியோடு கேள்வியெழுப்பியுள்ளார். “நான் என் வீட்டில் பெட்ரூமில் மதிய நேரத்தில் அமர்ந்திருந்தேன். யாரோ என்னை நீண்ட நேரமாக பார்ப்பதாக தோன்றியது. உடனே நான் சுற்றி முற்றி பார்த்தபோது என் வீட்டின் பக்கத்து கட்டிடத்தின் மாடியில் கேமராவுடன் இரண்டு பேர் இருந்தார்கள்.
இந்த உலகில் இதுதான் சரி என எவையெல்லாம் அனுமதிக்கப்படுகிறது என எனக்கு தெரியவில்லை. இது ஒருவரின் தனியுரிமையின் மீதான கடுமையான ஆக்கிரமிப்பாகும். எப்போதும் உங்களால் கடக்க முடியாத லிமிட் என்ற ஒன்று உள்ளது. ஆனால் அந்த லிமிட் இன்று பாதுகாப்பாக கடக்கப்பட்டு விட்டது” என மும்பை போலீசாரையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியது. ஆலியாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர். நடிகர் அர்ஜூன் கபூர் வெளியிட்ட பதிவில், “இந்த செயல் முற்றிலும் வெட்கக்கேடானது. அவர் ஒரு பிரபலமாக இருக்கிறார் என்பதை ஒரு நொடி மறந்துவிடுங்கள். ஒரு பெண் தன் சொந்த வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை என்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்வாதாரத்திற்காக இதுபோன்ற நபர்களை புகைப்படம் எடுக்கும் எவரும் இது ஆபத்தான செயல் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஊடகங்களில் உள்ளவர்கள், பெண்கள் பாதுகாப்பற்றதாக உணர செய்யாத வகையிலான ஒரு வேலையைச் செய்யத் தான் இங்கு வந்துள்ளீர்கள் என நாங்கள் நம்புகிறோம்" என கூறியிருந்தார்.
தனியுரிமை பற்றி ஆலியா பட் பேசுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காதல் திருமணம் செய்துக் கொண்ட பாலிவுட்டின் பிரபலமான ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினருக்கு நவம்பர் மாதம் குழந்தை பிறந்தது. ராஹா என பெயரிடப்பட்ட அந்த குழந்தையை போட்டோ எடுக்க பலரும் முயன்றனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் ஊடகத்தினரை சந்தித்து, தங்கள் மகளின் படங்களை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர்.
தனது குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா பட் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த தாதாசாகேப் பால்கே விருது விழாவில் கலந்து கொண்டார். இதில் கங்குபாய் கதியவாடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.