Alia Ranbir Baby: "நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட, அன்பான பெற்றோர்..! எங்கள் குழந்தை வந்துவிட்டாள்.." அலியாபட் நெகழ்ச்சி..!
தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான அழகிய பதிவு ஒன்றை அலியா பகிர்ந்துள்ளார்.
அலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், திரைத்துறையினர், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான அழகிய பதிவு ஒன்றை அலியா பகிர்ந்துள்ளார்.
ஆண், பெண், குழந்தை என மூன்று சிங்கங்கள் உள்ள படத்துடன், “எங்கள் வாழ்க்கையின் சிறந்த செய்தி இதுதான். எங்கள் குழந்தை வந்துவிட்டாள்.... என்ன ஒரு மாயக்கார பெண்! நாங்கள் அதிகாரப்பூர்வமாக அன்பில் திளைக்கிறோம். இப்படிக்கு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர் அலியா - ரன்பீர்” எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அலியாவின் இந்தப் பதிவில் பாலிவுட் பிரபலங்களும், அலியா - ரன்பீரின் ரசிகர்களும் வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாலிவுட்டின் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ரன்பீர் கபூரும், முக்கிய நடிகைகளுள் ஒருவரும் இயக்குநர் மகேஷ் பட்டின் மகளுமான அலியா பட்டும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து காதல் பறவைகளாக வலம் வந்த இருவரும் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்,
தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அலியா அறிவித்து தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அலியா, முன்னதாக தனது டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா படங்களின் ப்ரொமோஷன் பணிகளில் கலந்து கொண்டு அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
கடந்த மாதம் அலியாவுக்கு வளைகாப்பு விழா அவரது மும்பை இல்லத்தில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது. அந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தன.
இன்று காலை அலியா பட் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.