Vidamuyarchi - Goat : அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் அஜித் விஜய் படங்கள்.. படைபலத்தை காட்ட காத்திருக்கும் ரசிகர்கள்
அஜித் நடிக்கும் விடாமுயற்சி மற்றும் விஜய் நடிக்கும் கோட் படங்களின் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி மே மாதம் மற்றும் விஜய் நடித்து வரும் கோட் (GOAT) படம் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் ஸ்டார்களாக அஜித் மற்றும் விஜயின், அடுத்த படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர்கள் நடித்த துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்கள் நேருக்கு நேர் களமிறங்கி இரண்டுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. தற்போது அஜித் விஜய் நடித்துவரும் படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி குறித்த தகவல்களை சினிமா ஆர்வலர்கள் பகிர்ந்துள்ளார்கள்.
விடாமுயற்சி
தடையறத்தாக்க, மீகாமன் , தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. சஸ்பென்ஸ், த்ரில்லர், ஆக்ஷன் வகைப் படங்களில் தனித்துவமான ஸ்டைல் கொண்டவர் மகிழ் திருமேணி. விடாமுயற்சி படமும் அப்படியான ஒரு அனுபவமாக இருக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
விடாமுயற்சியின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது , த்ரிஷா கதாநாயகியாக மற்றும் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து வெளிநாடுகளில் எடுக்கப்படுவதால் இந்தப் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு பெரிதாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட விடாமுயற்சி வருகின்ற மே மாதம் அஜித் குமார் பிறந்தநாளான 1-ஆம் தேதி வெளியாகும் என சினிமா ஆர்வலர்கள் கணித்துள்ளார்கள்.
கோட் (G.O.A.T)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட் (G.O.A.T). இப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கும் நிலையில் சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் , மீனாக்ஷி செளத்ரி , பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஏ.ஜி எஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தொடர்ந்து பொங்கலன்று படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தை வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நாளில் இல்லையென்றாலும் அடுத்தடுத்த மாதங்களில் இரு பெரும் நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன, ஒவ்வொரு முறையும் அஜித் மற்றும் விஜய் படங்கள் வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை முறியடித்து வரும் நிலையில் இந்த முறை எந்த படம் வெல்லப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

