'நிஜமாகவே நடையை கட்டிய கண்ணம்மா' - சீரியலில் இருந்து விலகினார் ரோஷினி!
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி திடீரென வெளியேறியிருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்று பெயர் பெற்ற விஜய் டிவி, சில ஆண்டுகளாக சீரியல்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போது அதிக ரசிகர்களைக் கொண்ட சீரியல்கள் விஜய் டிவி சீரியல்களான உள்ளன. டிஆர்பி ரேட்டிங்கிலும் விஜய் டிவி சீரியல்களே டாப்பில் உள்ளன. இதில் விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா. இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா என்ற விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது. இந்த உண்மை எப்போது பாரதிக்கு தெரிய வரும்? அவன் எப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் பாரதிக்கு தம்பியாக நடித்து வந்த அகிலன், பட வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகிய நிலையில், கண்ணம்மாவாக நடித்து வந்த ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியனும் தற்போது திடீரென சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். நேற்று முன் தினம், அதாவது அக்டோபர் 23 சனிக்கிழமை ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர் அன்றுடன் விடை பெறுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாராம். மாடலிங்கிலிருந்து டிவிக்கு வந்த ரோஷினிக்கு ’பாரதி கண்ணம்மா’தான் முதல் சீரியல். பிரைம் டைமில் அதுவும் சீரியல் ஹிட்டாகப் போய், நல்ல ரீச் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென நிகழ்ந்திருக்கும் அவரது வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து டிவி வட்டாரத்தில் மாறுபட்ட பேச்சுகள் கேட்கின்றன. சீரியலில் கிடைத்த பிரபலம் காரணமாக சமீபமாக அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் நிறைய வந்ததால் சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகவே வெளியேறி இருக்கிறார் என கூறப்படுகிறது.
நிறைய வருடங்கள் மாடலிங் துறையில் இருந்திருந்தாலும் நடிப்புக்கான வாய்ப்புகள் அவளது டஸ்கி ஸ்கின் டோன் காரணமாக வரவில்லையாம். அதன் பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் வந்ததுதான் பாரதி கண்ணம்மா வாய்ப்பாம், சீரியல் ஹிட் ஆனதிலிருந்து நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் இமேஜ் எப்படி உதவும் என்று தெரியவில்லை என கருதுவதாக பலர் தெரிவித்ததுதான் இந்த முடிவுக்கு காரணமாக இருக்குமென நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீரியலின் வில்லி ஃபரீனா (வெண்பா) தற்போது கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் டெலிவரிக்குச் செல்லும் அவருக்குப் பதிலாக வேறு யாரேனும் வருவார்களா அல்லது அவருடைய ட்ராக் இல்லாமலேயே போகுமா என்பது இதுவரை தெரியவில்லை. இந்தச் சூழலில் ஹீரோயினும் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பது ’பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.