ஷூட்டிங்கில் கொண்டையைப் பிடித்து ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா... கடுப்பான பசி சத்யா...என்ன நடந்தது தெரியுமா?
பசி படத்தில் திறம்பட நடித்து பசி சத்யா எனும் அடைமொழியைப் பெற்ற சத்யா, வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்துக் கலக்கியவர்.
கோலிவுட் சினிமாவில் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் என்றாலும் தங்கள் தனித்துவ முத்திரைகள், அபார திறமையால் முத்திரை பதித்த நடிகர், நடிகைகள் எக்கச்சக்கம். அப்படி 80களில் சிறு சிறு வேடங்களில் திரையில் தோன்றி பாத்திரத்துக்கு நியாயம் செய்து தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை பசி சத்யா.
பிரபல குணச்சித்திர நடிகை
1974ஆம் ஆண்டு நேற்று இன்று நாளை எனும் படத்தில் கோலிவுட்டில் அறிமுகமாகி, 1979ஆம் ஆண்டு பசி படத்தில் திறம்பட நடித்து பசி சத்யா எனும் அடைமொழியைப் பெற்ற சத்யா, வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்துக் கலக்கியவர்.
எம்.ஜி.ஆர் தொடங்கி, இன்றைய காலக்கட்ட நடிகர்கள் வரை பலருடனும் திரையைப் பகிர்ந்து கொண்டுள்ள பசி சத்யா, நடிகை சில்க் ஸ்மிதாவுடனான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட்டில் கவர்ச்சிப் பாதையில் தொடங்கி , கண்களால் ரசிகர்களை வசியம் செய்து பெரும் கனவுக்கன்னியாக உருவெடுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நடிகை சில்க் ஸ்மிதாவைச் சுற்றி ஏராளமான புதிர்களும் சுவாரஸ்யங்களும் இன்று வரை சுழல்கின்றன.
டச் அப் பெண்ணாக சில்க் ஸ்மிதா!
அந்த வகையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பசி சத்யா சில்க் ஸ்மிதாவுடன் தான் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“சில்க் ஸ்மிதா என்பவர் மக்களுக்கு தெரிந்த கவர்ச்சிப்புயல். எல்லாருக்குமே வாழ்க்கையில் ஒரு பின் பகுதி இருக்கும். அவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருந்த நடித்த மாபெரும் நடிகர், நடிகைகள் இருந்திருக்கிறார்கள். அது ஒரு பெரிய வரலாறு. அவருடைய வாழ்க்கையில் முதலில் சில்க் ஸ்மிதா டச் அப் பெண்ணாக தான் இருந்துள்ளார்.
இவரெல்லாம் இந்த வேலை பார்க்க வந்துள்ளாரே என யாரோ அவரைக் கேலி செய்துள்ளார்கள் என அப்போது வருந்தியிருக்கிறார். அதன் பின் வண்டிச்சக்கரம் படத்தில் நடித்தார். நான் அவரை அதன்பின் அடிக்கடி பார்ப்பேன். நான் ஒரு சாதாரண நடிகையாக தான் அப்போது இருந்தேன். ஆனால் அவர் ஒரு பெரிய நடிகையாக இருந்துகொண்டு என்னைக் கட்டிப்பிடித்து தான் பேசுவார்.
சில்க் உடனான சண்டை
‘ஒன்னும் தெரியாத பாப்பா’ எனும் படத்தில் அவருடன் இணைந்து ஹாஸ்டல் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் ரஃப் அண்ட் டஃபாக அவரிடம் பேச வேண்டும். என்னை அந்தக் காட்சியில் என்னை எதிர்த்துப் பேசி ஓங்கி அடிப்பார். நான் அடி வாங்கிக்கொண்டு கத்துவேன்.
சரோஜா தேவி கொண்டை அப்போது ஃபேம்ஸ். அவர் அந்தக் கொண்டையை அந்தக் காட்சியில் ஏளனம் செய்ய வேண்டும். என் கொண்டையை இழுத்து நடிக்க வேண்டும். ஆனால் சில்க், என்னிடம் சொல்லாமல் அந்தக் காட்சியில் என்னை சடாரென அடித்து விட்டார். நான் அதிர்ந்துவிட்டேன். மிகவும் கோபமாகிவிட்டேன்.
அதன் பின் அந்தக் காட்சி முடிந்து தன் வழக்கமான குரலில் கொஞ்சலாகப் பேசி, எனக்கு ஜூஸ் கொடுக்க சொல்லி ஐஸ் வைத்து சமாதானப்படுத்தி சென்றார். நானும் கோபம் போய் சமாதானமாகிவிட்டேன். அவர் சாலிகிராமத்தில் தான் குடி இருந்தார். இன்றைக்கு அவர் இல்லாதது இழப்பு. இளைஞர்களுக்கு நான் சொல்வது கொஞ்சம் நிதானமாக இருங்கள், அவசரப்படாதீர்கள். நான் அறிவுரை சொல்லவில்லை. என் மன உளைச்சலை சொல்கிறேன்” எனப் பேசியுள்ளார்.