(Source: ECI/ABP News/ABP Majha)
Parvathy: ஹிஜாப் சர்ச்சை.. பெண்களுக்கு எதிரான கொடுமை.. யாருமே கேட்குறதல்ல - கொதித்தெழுந்த நடிகை பார்வதி!
நடிகை பார்வதி, சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றியும், அவற்றை நாம் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் காரசாரமாக பேசியுள்ளார்.
மலையாள இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் நடிகர் பார்வதி தற்போது ‘வொண்டர் வுமன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி சோனி லைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பார்வதி, சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றியும் அவற்றை நாம் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் காரசாரமாக பேசியுள்ளார்.
வொண்டர் வுமன்
அஞ்சலி மேனன் இயக்கத்தில் பார்வதி, நித்யா மேனன், நதியா என பல முன்னணி நடிகைகள் நடிப்பில் உருவான ஆங்கில திரைப்படம் வொண்டர் வுமன். டிரைலரை பார்க்கும் பொழுது, கர்ப்பகால வகுப்புகளின் போது சந்திக்க நேரும் ஐந்து கர்ப்பிணிகள், தங்களது கர்ப்பகால பிரச்னைகள் குறித்து பேசும் திரைப்படமாக வொண்டர் வுமன் அமைந்திருக்கிறது.
View this post on Instagram
வொண்டர் வுமன் திரைப்படம் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், நடிகை பார்வதி தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நம் நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் பொதுவாக பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். ஜாதிய அடிப்படையில் பெண்களுக்கு நிகழும் குற்றங்கள் குறித்து, நடிகை பார்வதி பேசுகையில், ''நம் சகோதரிகள் உயர் சாதி கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டு மரத்தில் கட்டி தொங்கவிட்டாலும், அதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை.''
மேலும் ''நம் நாட்டில் பெண்களின் உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. இதில் நம் நாடு மக்களாட்சி நாடு வேற!'' என்று கூறியுள்ளார். இதில் அவர் கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சனையை மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.
View this post on Instagram
மேலும் ஈரானில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''எதைப் பற்றியும் நான் விமர்சிக்க விரும்பவில்லை. நான் விமர்சிப்பதை நிறுத்தி விட்டேன். மேலும் விமர்சிப்பதை பழமையான ஒன்றாக நான் உணர்கிறேன். இது நாம் செயல்பட வேண்டிய நேரம். உடனடியாக நாம் நடவடிக்கை எடுத்தால் தான் நம் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்.''
மேலும், ''வெளிநாட்டு பிரச்னைகளின் போது, நமது ஊடகத்தினர் அதைப் பற்றி நிறைய விமர்சிக்கின்றனர். ஆனால் நம்மூரில் நடக்கும் கௌரவ கொலைகள் குறித்து, இங்கு பேசப்படுவது இல்லை.நான் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று கூறவில்லை.
இந்த உலகில் எங்கு அநீதிகள் தலை தூக்கினாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பது நமது கடமை. ஆனால் உலகளவில் நமது கருத்துக்கள் எடுபட வேண்டும் என்றால்… முதலில் உள்ளூர் விவகாரங்களில் நாம் தலையிட வேண்டும். முதலில் நம் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் பேச வேண்டும். அதன்பின் நம் குரலால் நாட்டின் எல்லைகளிலும், அடுத்த நாடுகளிலும் நேரும் அநீதிகளை தடுக்க முடியும்'' என்று நடிகை பார்வதி பேசியுள்ளார். வொண்டர் வுமன் திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.