HBD Meena: சுட்டி லேடி டூ சூப்பர் ஸ்டார் ஜோடி… தமிழ் சினிமாவின் மாஸ்டர்பீஸ் நாயகி மீனாவின் பிறந்தநாள் இன்று..!
எஜமான் வைத்தீஸ்வரியான மீனாவை ரஜினியுடன் திரையில் பார்க்கும் போது அன்புள்ள ரஜினிகாந்த் மீனாவா இது என ஆச்சர்யத்தில் ரசித்தனர் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவரான மீனா இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் திரையுலகில் இன்றளவும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் மீனா. இவர் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். தாயார் ராஜ்மல்லிகா நடிகை என்றால் தான் ஒரு மகா நடிகை என நிரூபித்து இருக்கிறார் மீனா.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கியவர். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசனின் 'நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மீனா…
View this post on Instagram
முதல் படத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கபெறவில்லை என்றாலும், அதே ஆண்டில் ரஜினி, அம்பிகா, ராதா நடித்த எங்கேயோ கேட்ட குரல் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்திருப்பார். ஆனால் 1984 இல் வெளிவந்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம் மீனாவின் திரைவாழ்வில் முக்கியப்புள்ளியாக அமைந்தது."ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க…" என்று தன் மழலைக் குரலில் சூப்பர் ஸ்டாரை உரக்கக் கூப்பிட்ட 8 வயது சிறுமி, பின்னாளில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக வலம்வந்த காலங்கள் அனைத்தும் இவரது நடிப்பின் உன்னதத்தை விவரிக்கிறது.
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் இளையராஜா இசையில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் டிரெண்டானார் நடிகை மீனா. இந்த திரைப்படம் வெள்ளி விழா கண்டது. இந்த படத்தில் இடம்பெற்ற குயில் பாட்டு வந்ததென்ன பாடலில் இருக்கும் மீனாவுக்கு 15 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாது அந்தளவுக்கு தனது நடிப்பால் கட்டிப்போட்டிருப்பார்.
பின்னர் சூப்பர் ஸ்டார் ஜோடியாக எஜமான் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெரிதும் பெற்றார். எஜமான் வைத்தீஸ்வரியான மீனாவை ரஜினியுடன் திரையில் பார்க்கும் போது அன்புள்ள ரஜினிகாந்த் மீனாவா இது என ஆச்சர்யத்தில் ரசித்தனர் ரசிகர்கள்!
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடிப்பை வெளிக்காட்டுவது இவருக்கு கை வந்த கலை எனலாம். பின் ரஜினியுடன் முத்து, வீரா என நடித்து ஸ்டார் அங்கீகாரமும் பெற்றுவிட்டார். சூப்பர் ஸ்டார் மட்டுமா உலக நாயகன், நவரச நாயகன், அஜித் என அன்றைய காலக்கட்டத்தில் இவர் உடன் நடிக்காத முன்னணி நட்சத்திரங்களே இல்லை என்றளவுக்கு வளர்ந்தார். இதில் விஜய்யுடன் மட்டும் அவரால் கடைசி வரை ஜோடியாக நடிக்க முடியவில்லை. அதனால் தான் ஷாஜகான் படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.
மேலும் முன்னணி நடிகர்கள் மட்டுமில்லை அன்றைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் படங்களிலும் மீனா நடித்துள்ளார். பல கதாபாத்திரங்களில் நம் பக்கத்து வீட்டு பெண்ணாகவே வலம் வருவார். ஆடியன்ஸ் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மீனாவின் மீன் போன்ற கண்களே படத்தில் பாதி வசனம் பேசிவிடும். இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் கதாபாத்திரங்களை அவர் தேர்வு செய்து நடிக்கும் பண்பு தான்.
நாட்டாமை, பாரதி கண்ணம்மா, ரிஷி, ரிதம், அரிச்சந்திரா, அவ்வை சண்முகி, வில்லன், பொற்காலம் என இவரது மெகா ஹிட் பட்டியல் நீண்டு கொண்டே போகும். பின்னர் குடும்பம் குழந்தை என சிறு இடைவெளிக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மலையாளத்தில் இவர் நடித்த த்ரிஷ்யம்,த்ரிஷ்யம் 2 (மலையாளம்) ஆகிய திரைப்படங்கள் மெகா ஹிட் ஆனது. இந்த திரைப்படம் தான் தமிழில் பாபநாசம் என்று கமல், கௌதமி நடிப்பில் வெளியானது.
தமிழில் ரஜினியின் குசேலன் திரைப்படத்தில் நடித்தார். கடைசியாக கடந்தாண்டு தீபாவளிக்கு வெளிவந்த சூப்பர் ஸ்டார் திரைப்படமான 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த 2 திரைப்படங்களிலும் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக நடிக்கவில்லை.1998 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார் மீனா. மேலும் ஃபிலிம்பேர், நந்தி விருது என பல திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். 30 ஆண்டு காலமாக திரையுலகில் மின்னுகிறார் நடிகை மீனா!
குட்டி மீனா ஆல்ரெடி ரெடி!
நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.நடிகர் விஜய்யின் தெறி திரைப்படத்தில் அவரது மகளாக அறிமுகமாகி நடிப்பில் அசத்தியிருந்தார் பேபி நைனிகா. பின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தில் அமலா பாலுக்கு மகளாக நடித்திருப்பார். அம்மா மகா நடிகை என்றால் அப்போ நான் யார் என்று கேட்கிறார் இந்த குட்டி மீனா நைனிகா… சமீபத்தில் உடல் நலக்குறைவால் அவரது கணவர் வித்யாசாகர் மரணமடைந்த நிலையில் எந்த காலக்கட்டத்திலும் மீனா சோர்ந்து போகாதபடி அவரது ரசிகர்கள் உடனிருக்கின்றனர். இதுவே மீனாவின் பெரும் பலம்... தமிழ் சினிமாவின் மாஸ்டர்பீஸ் நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !