6 மாதம் பட வாய்ப்பே இல்ல...வேதனை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்
தனது 6 மாத காலம் எந்த பட வாய்ப்பும் வராதது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் நடித்து தமிழில் வெளியாகும் படம் இது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது தனக்கு 6 மாதம் திரைப்பட வாய்ப்புகள் வராமல் இருந்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் மீண்டும் திரையில் கீர்த்தி சுரேஷ்
வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களை சமாளித்துக், திரையுலகில் தன்னுடைய தனி அடையாளத்தை உருவாக்கியவர். இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் இவரின் முதல் முயற்சி. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதனைத் தொடர்ந்து வெளியான ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ போன்ற படங்கள் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றன.
தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த படம் உருவானது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார். மகாநடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்த நடித்த ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’, ‘வசி’, ‘ரகுதாதா’, ‘சாணி காகிதம்’ போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூல் ரீதியில் பெரிதும் வெற்றி பெற முடியவில்லை. தற்போது சோலோவாக அவர் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரையரங்கில் வெளியாக இருக்கிறது
6 மாதம் பட வாய்ப்பு இல்லை
ரிவால்வர் ரீட்டா படத்தின் ப்ரோமோஷனின் போது கீர்த்தி சுரேஷ் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது மகாநடி படத்திற்கு பின் தனக்கு அடுத்த 6 மாதங்கள் எந்த பட வாய்ப்பும் வரவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் தான் இதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டதாகவும் தனக்காக நல்ல கதாபாத்திரங்களை எழுத இயக்குநர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக தான் இதை எடுத்துக்கொண்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்
ரிவால்வர் ரீட்டா
ஜேகே சந்த்ரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டா. ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்ட்ராயன், சூப்பர் சுப்பராயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரைம் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது




















