Actress Gautami: சென்னை மழையில் உற்சாக வீடியோ பகிர்ந்த கௌதமி... ஹார்ட்டின் பறக்கவிட்ட ஸ்ருதி ஹாசன்!
“இதை விட சிறப்பானது என்ன இருக்க முடியும், அழகிய சென்னை” எனும் கேப்ஷனுடன் கௌதமி வீடியோ பகிர்ந்துள்ளார்
சென்னை மழையை ஜாலியாக நனைந்து மகிழும் வீடியோவை நடிகை கௌதமி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80களின் முக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை கௌதமி. 1987ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான கௌதமி, தமிழில் முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள கௌதமி, அன்றைய டாப் ஸ்டார்களான ராமராஜன், சத்யராஜ், விஜயகாந்த், டி ராஜேந்தர் எனத் தொடங்கி நடிகர்கள் கமல் - ரஜினி வரை அனைவருடனும் திரையில் ஜோடி சேர்ந்தார்.
மேலும் நடிகர் கமல்ஹாசனுடன் திரையிலும் நிஜ வாழ்விலும் சிறந்த ஜோடியாக விளங்கிய கௌதமி அவருடன் அபூர்வ சகோதரர்கள் தொடங்கி பாபநாசம் வரை சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
1990களில் ஆரம்ப காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கனவு நாயகியாக இவர் படுபிஸியாக நடித்து வந்த நிலையில், கௌதமிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்குப் பின் புற்றுநோயிலிருந்து விடுபட்டார்.
தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் கௌதமி, இறுதியாக சாகுந்தலம், அன்னி மஞ்சி சக்குனமுலே ஆகிய தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.
தற்போது தமிழில் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தில் கௌதமி நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு முதல் சென்னையில் மழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில் நடிகை கௌதமி கருப்பு உடை அணிந்து மழையில் இறங்கி சென்னை வானிலையை ரசித்தவாறு வலம் வரும் அழகிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
“இதை விட சிறப்பானது என்ன இருக்க முடியும், அழகிய சென்னை” எனும் கேப்ஷனுடன் கௌதமி வீடியோ பகிர்ந்துள்ள நிலையில், இந்த வயதில் உங்கள் உற்சாகத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
நடிகை கௌதமியி இந்த வீடியோவுக்கு நடிகை ஸ்ருதி ஹாசனும் ஹார்ட்டின் பறக்கவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் - கௌதமி பிரிவுக்கு நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒரு காரணம் என சர்ச்சைகள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது ஸ்ருதி இந்த வீடியோவை லைக் செய்துள்ளதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
சினிமா தவிர பாஜகவில் இணைந்து அரசியலிலும் பிஸியாக வலம் வரும் நடிகை கௌதமி, தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துக்களை அழுத்தமாகத் தெரிவித்து வருகிறார்.
மேலும் தன் மகள் சுப்புலட்சுமியுடன் தொடர்ந்து கௌதமி ஃபோட்டோக்கள் பகிர்ந்து வரும் நிலையில், விரைவில் சுப்புலட்சுமி சினிமாவில் தன் தாயைப் போல் எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.