Actress Ambika: அரசியல் கட்சியில் சேர்கிறேனா? குஷ்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மனம் திறந்த அம்பிகா!
என்னுடை கருத்தை தான் சொன்னேன். இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
Actress Ambika: நீங்க திமுகவா, அதிமுகவா என்று சமூக வலைதளங்களில் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர் என்று நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
குஷ்பு சர்ச்சை:
சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் பாஜக சார்பில் மார்ச் 11ஆம் தேதி போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததார்.
அப்போது, "தாய்மார்களுக்கு ரூபாய் ஆயிரம் பிச்சைப் போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா?" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுகவின் அமைச்சர்களில் இருந்து பொதுமக்கள் வரை பலரும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.
இதற்கு நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில், "யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. ஒருவர் மக்களுக்கு எதேனும் ஒரு உதவியைச் செய்கிறார்கள் என்றால் அது மக்களுக்கு கட்டாயம் பயனுள்ளது எனில் அதனை பாராட்டவேண்டும். உங்களால் அதனை பாராட்ட முடியவில்லை என்றால் தயவு செய்து அது குறித்து இழிவா பேசாதீங்க" என்று குறிப்பிட்டிருந்தார்.
"பிச்சை என்று சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”
இந்த நிலையில், இன்று பிரபல ஊடகத்துக்கு குஷ்பு சர்ச்சை பேச்சு குறித்து நடிகை அம்பிகா பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "ஒரு சிறிய குடும்பத்திற்கு அரசு மாதந்தோறும் கொடுக்கும் 1000 ரூபாய் மளிகை, கேஸ் சிலிண்டர், மருந்து உள்ளிட்டவற்றை வாங்க பயன்படுகிறது. ஒரு நல்ல திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த 1000 ரூபாய் தொகை எவ்வளவு முக்கியம் என்றும் பெண்களிடம் கேட்டு பாருங்க. அவர்கள் சொல்வார்கள்.
இந்தப் பணத்தை பிச்சை என்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த விஷயம் எவ்வளவு முக்கியம் என்று தெரியாமல் குஷ்பு பேசிவிட்டார்கள். ஒரு விஷயத்தை பற்றி நல்லது சொல்லவில்லை என்றால், அதை பற்றி இழிவாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
"எந்தவித அரசியலும் இல்லை”
இந்த விஷயத்தில் என்னுடை கருத்தை தான் சொன்னேன். இதில் எந்தவித அரசியலும் இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம். இதை பற்றி பேசுனதும் நீங்க திமுகவா, அதிமுகவா என்று கேள்வி கேட்கிறார்கள். சோஷியல் மீடியாவில் ஒரு பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன கூட கடுமையான வார்த்தைகளால் பேசுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. நான் இதற்கு எல்லாம் கோபப்படமாட்டேன்.
நான் எந்த கட்சியையும் சார்ந்து இல்லாதபோது, மற்றவர்கள் என்னை பற்றி பேசுவதற்கு எந்த பயனும் இல்லை. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால் அம்பிகாவுக்கு அரசியலில் நுழைய விருப்பம் இருப்பதாக வதந்தி பரவும் என்பது எனக்கு தெரியும். இதற்காக எல்லாம் என்னால் எதற்கும் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. ஒரு நான்கு நாட்களுக்கு என்னை பற்றி பேசுவார்கள். பேசட்டும். இதில் எந்த பயனும் இல்லை" என்றார் அம்பிகா.