Madhagajaraja: மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
Madhagajaraja Release Date: நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிய மதகஜராஜா படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படம் மூலமாக கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகினார். அதன்பின்பு, சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, துப்பறிவாளன் என பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
12 வருடங்களுக்குப் பிறகு மதகஜராஜா(Madhagajaraja):
இவரது நடிப்பில் கடந்த 2013 காலகட்டத்தில் உருவான படம் மதகஜராஜா. தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிய இந்த படம் திரைக்கு வராமல் கிடப்பிலே இருந்தது. இந்த படத்திற்கு பிறகே விஷால் பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி, மருது, கத்தி சண்டை, துப்பறிவாளன் என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடித்து வருகிறார்.
பொங்கல் ரிலீசில் இருந்து விடாமுயற்சி பின்வாங்கிய நிலையில், பொங்கல் வெளியீடாக திரைக்கு வர பல படங்கள் மல்லு கட்டி வருகின்றன. அதில் யாரும் எதிர்பாராத விதமாக விஷால் நடிப்பில் கடந்த 12 வருடங்களாக கிடப்பில் உள்ள மதகஜராஜா படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாக உள்ளது.
சுந்தர் சியின் காமெடி கலாட்டா:
சுந்தர் சி இயக்கியுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். ப்ரவீன், ஸ்ரீகாந்த் இந்த படத்தை எடிட் செய்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் சந்தானம், சதீஷ், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட் ஆகியோர் நடித்துள்ளனர்.
மதகஜராஜா படத்தில் இருந்து விஷால் பாடிய ஒரே ஒரு பாடல் மட்டுமே அப்போது ரிலீசாகியது. இந்த படத்தின் பணிகள் 2012ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசாகியது.
வெற்றி பெறுமா?
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீசாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்தில் மறைந்த நடிகர் மணிவண்ணன் நடித்துள்ளார்.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு ரிலீசான படங்கள் ஏதும் இதுவரை பெரிய வெற்றி பெற்றதில்லை. இந்த நிலையில், சுமார் 12 வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தை ரிலீஸ் செய்ய இருப்பது அந்த படத்திற்கு வசூல் ரீதியாக எந்தளவு வெற்றியைத் தரும் என்று உறுதியாக கூற இயலாது. இந்த பொங்கலுக்கு வணங்கான், வீர தீர சூரன், டென் ஹவர்ஸ், காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், கேம் சேஞ்சர் என பல படங்களுடன் தற்போது மதகஜராஜா படமும் ரிலீசாக உள்ளது.