Vijay Sethupathi: திரையரங்குகளில் விரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி..
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இவரது மூன்று படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும். இவர் இயக்கிய ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், ரித்திகா சிங்கும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படங்களுக்கு பிறகு, இயக்குனர் மணிகண்டன் கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
இந்த படத்தில் நாயகனாக இல்லாமல் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவு பெற்றது. இந்த படத்தை எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கிய மணிகண்டனே இந்த படத்தை தயாரித்திருந்தார். ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் வெளியீடு தடைபட்டது. இதனால், படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.
அதற்காக, சோனி லைவ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, படத்தை வெளியிடுவதற்கும் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகளை கடந்த 23-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துது. இதையடுத்து, திரையரங்குகள் திறக்கப்பட்டு ஊரடங்கிற்கு முன்பு வெளியான திரைப்படங்கள், ரஜினி, கமல், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் திரைப்படங்களும் தற்போது திரையிடப்பட்டு வருகிறது.
திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால், கடைசி விவசாயி திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளிடும் முடிவை படத்தின் தயாரிப்புக்குழு திரும்ப பெற்றுள்ளது. மேலும், படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரதான கதாபாத்திரத்தில் நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். மேலும், நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க : கீர்த்தி சுரேஷுக்கு இந்த ரோலா? அப்போ இங்க ஒரு பரம சுந்தரி திருவிழா ரெடி..!
நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக வில்லன் போன்ற பிரதான கதாபாத்திரங்களிலே நடித்து வருகிறார். அவர் நாயகனாக தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோருடன் இணைந்து ”காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர்செப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.