Actor Vijay: விஜய்யின் அடுத்த கட்ட மூவ்: 3 மாதங்களில் புதிய கட்சி? மதுரை, திருச்சியை குறிவைத்து செம பிளான்!
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியானது பெரும் பரபரப்பை கிளப்பி வரு
அரசியலில் நடிகர் விஜய்
திரையுலகில் உச்சத்தைத் தொட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலிலும் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய காலக்கட்டத்தில் அரசியலிலும் சினிமா நடிகர்கள் காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனியாக பாதை அமைத்து அரசியலில் பயணித்து வருகின்றனர்.
அந்த வகையில், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை நடிப்பால் தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். அதுமட்டுமின்றி, அவரது படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகள் திருவிழாக் கோலத்தை ஏற்கின்றன. வசூலில் பல புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன. வசூல் ரீதியில் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாப்படுகிறார். அதேநேரம், சினிமாவை தாண்டி தமிழக அரசியலிலும் இவரது பெயர் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுள்ளது. காரணம், தனது ரசிகர் பட்டாளத்தை அரசியல் இயக்கமாக மாற்றி, தீவிர அரசியலில் களமிறங்குவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி வருவது தான். சமீபத்தில் கூட, பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய், அதன் பிறகு காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலை தொடங்குவதாக அறிவித்தார்.
லியோ படத்தையும் விடாத சர்ச்சை:
இதற்கிடையில், அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. லியோ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு பிரச்னையாக முளைத்தது. கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, அதிகாலை காட்சிகளுக்கு அனுதி கிடையாது, திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து விநியோகஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டது, சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு படக்குழு நீதிமன்றத்தை நாடியது, ஆந்திராவில் படத்தலைப்பில் காப்புரிமை சிக்கல் என அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதனால், அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் செய்திதாள்களிலும் லியோ படம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றன. விஜயின் அரசியல் வருகையை தடுக்க ஆளுங்கட்சி, விஜயின் படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது என சமூக வலைதளங்களிலும் கடுமையாக விவாதங்கள் எழுந்திருந்தது.
புதிய கட்சி தொடங்குகிறாரா விஜய்?
இப்படியான சூழ்நிலையில் தான், நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான தயார் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, இரண்டு, மூன்று மாதங்களில் புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விரைவில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும் இதற்காக மதுரை, திருச்சி மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சியாக மாறும்போது விஜய் மக்கள் இயக்கத்தில் முழு அர்ப்பணிப்பும், உழைப்பும் தந்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்கனவே வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.