HBD Vijay: நாம மிஸ் பண்ணுன விஜய்! குடும்பங்கள் கொண்டாடிய தளபதியை இந்த படத்துல பாக்கலாம்!
அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்த குடும்பங்கள் கொண்டாடிய விஜய்யின் படங்களை கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக உலா வருபவர் விஜய். அவரது 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை ரசிகர்களும், தவெக தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் இன்று ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்திருந்தாலும் அவர் ஒரு காதல் நாயகனாக நடித்த படங்களே அவருக்கு ஏராளமான குடும்பங்கள் மத்தியில் தங்கள் வீட்டுப் பிள்ளையாக கொண்டு சேர்த்தது.
அந்த வகையில் எந்த ஒரு ஹேட்டர்ஸ்களும் இல்லாத விஜய்யை கொண்டாடும் திரைப்படங்களை கீழே காணலாம்.
பூவே உனக்காக:
நடிகர் விஜய்க்கு முதன்முதலில் கிடைத்த வெற்றி இந்த பூவே உனக்காக. 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலமாக விஜய் நடிக்க வந்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி என்பது சாத்தியப்படாமலே இருந்தது. அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்த திரைப்படம் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கிய இந்த படத்தில் ஒரு தலை காதலுக்காக விஜய் தான் காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைப்பது அப்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக உருவெடுத்தது. விஜய்க்கு கோலிவுட்டில் முதன்முதலில் சிவப்பு கம்பளம் விரித்து அரியணைக்கு வித்திட்டதும் இந்த படமே.
காதலுக்கு மரியாதை:
விஜய்யை காதலில் நாயகனாக உயர்த்தியதில் காதலுக்கு மரியாதை படத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. ஒரு இந்து இளைஞனுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே தொடங்கும் காதல் திருமணத்தில் எப்படி சேர்கிறது? என்பதை ஃபாசில் படமாக கொடுத்திருப்பார். விஜய் - ஷாலினி ஜோடியின் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்தது. இளையராஜா இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. முழுக்க முழுக்க காதல் காவியமாகவே அமைந்த இந்த படம் விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகைகளையும் உண்டாக்கியது.
துள்ளாத மனமும் துள்ளும்:
நடிகர் விஜய்யின் திரை வாழ்வில் மறக்க முடியாத படம் துள்ளாத மனமும் துள்ளும். ஒரு சாதாரண இளைஞனாக விஜய் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். விஜய் இந்த படத்தில் நடித்த குட்டி கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தன்னை மோசமானவனாக நினைக்கும் காதலிக்கு கண்பார்வை பறிபோன பிறகு அவளை எப்படி குட்டி பார்த்துக்கொள்கிறான்? அவளுக்கு கண்பார்வை கிடைத்த பிறகு என்ன நடக்கிறது? என்பதே படத்தின் கதை. இந்த படம் எப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத ஒரு படம் ஆகும். எழில் இயக்கிய முதல் படம்.
கண்ணுக்குள் நிலவு:
நடிகர் விஜய் இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் ஷாலினியுடன் மீண்டும் நடித்த படம் கண்ணுக்குள் நிலவு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக விஜய்க்கு அமைந்தது. இளையராஜா இசையில் மீண்டும் ஒரு காதல் காவியமாக இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. ஒருநாள் ஒரு கனவு, நிலவு பாட்டு பாடல்கள் ஆல் டைம் ஃபேவரைட்டாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
பிரியமானவளே:
விஜய்க்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுபவர் சிம்ரன். இந்த ஜோடி நடிப்பில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடிய படம் ப்ரியமானவளே. பணக்கார இளைஞனுக்கும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்ணும் திருமண பந்தத்தில் இணைந்த பிறகு உருவாகும் மோதல், காதல், பிரிவு இதுவே கதை. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் இந்த படத்தை செல்வ பாரதி இயக்கியிருப்பார். இந்த படம் மிகப்பெரிய வசூல் படம் மட்டுமின்றி குடும்பங்களை மீண்டும் மீண்டும் திரைக்கு வர வைத்த படமாகவும் அமைந்தது.
ப்ரண்ட்ஸ்:
விஜய்யின் நடிப்பில் நல்லதொரு நகைச்சுவை விருந்தாக வந்த படம் ஃப்ரண்ட்ஸ். இந்த படமும் ஒரு காதல் கதை என்றாலும் வடிவேலுவின் நகைச்சுவை படத்தை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கும். விஜய் - சூர்யா- ரமேஷ் கண்ணா நட்பு, அவர்களுக்குள் வரும் சண்டை என படம் அருமையாக இருக்கும். சித்திக் இயக்கிய இந்த படம் விஜய்க்கு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது.
ஷாஜகான்:
முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாகிய படம் ஷாஜகான். பூவே உனக்காக போலவே இந்த படமும் ஒரு தலைக்காதல் காவியமாக விஜய்க்கு மாறியது. அனைத்து காதலர்களையும் சேர்த்து வைக்கும் இளைஞனாக வரும் விஜய் ஒரு பெண்ணை சொல்லாமலே காதலிக்க, அந்த பெண் தனது நண்பனின் காதலியாக வர என்ன நடக்கிறது? என்பதை படமாக கொடுத்திருப்பார் இயக்குனர் ரவி. மணிசர்மா இசையில் பாடல்கள் இன்றளவும் ரசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. சோகமான முடிவு என்றாலும் விஜய்யை கொண்டாட வைத்த படங்களில் இதுவும் ஒன்று.
காவலன்:
விஜய் ஆக்ஷன் ஹீரோவாக கில்லியில் இருந்து போக்கிரி வரை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என அதளபாதாளத்திற்கு சென்றார். அப்போது, மீண்டும் அவர் ஒரு காதல் நாயகனாக குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக உருவெடுத்து கம்பேக் தந்தது காவலன். ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல் முகம் தெரியாமல் தன்னை விரும்பும் பெண்ணை விரும்பும் இளைஞனாக விஜய் அற்புதமான நடிப்பை காட்டியிருப்பார். முழுக்க முழுக்க காதல் படமாக வந்த காவலன் மீண்டும் விஜய்யை சினிமாவை ஆள வைத்தது.
நண்பன்:
விஜய் ஆக்ஷன் அவதாரம் இல்லாமல் கல்லூரி மாணவனாக ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் நடித்த படம் நண்பன். ஷங்கர் இயக்கிய இந்த படம் அந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக விஜய்க்கு அமைந்தது. 40 வயதிலும் கல்லூரி மாணவனாக அசத்தலாக பொருந்தியிருப்பார் விஜய். இந்த படமும் எப்போதும் குடும்பங்களுடன் கொண்டாடும் ஒரு படமாகவே உள்ளது.
மேலே கூறிய படங்களில் விஜய் ஆக்ஷன் காட்சிகள் மிக குறைவாகவும், ஒரு நடிகனாக, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல நடிப்பை வெளிக்காட்டி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படங்கள். இதுதவிர அவர் ஆக்ஷன் ஹீரோவாக கில்லி, திருப்பாச்சி, துப்பாக்கி, போக்கிரி, கத்தி, தெறி, மெர்சல், மாஸ்டர், லியோ என பல வெற்றிப்படங்களை அளித்துள்ளார்.





















