Kanguva: அச்சச்சோ! கங்குவா படம் ரிலீஸ் ஆகாது போலயே? சூர்யா ரசிகர்களுக்கு வந்த புது சோதனை!
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் கங்குவா படம் ரிலீஸ் ஆவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. சூர்யா இதுவரை நடித்துள்ள படங்களிலே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இந்த படம் ஆகும். படத்தின் டீசர், ட்ரெயிலர் என ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்குவா ரிலீஸ் ஆகுமா?
தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்டையன் படம் வெளியீடு காரணமாக கங்குவா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்தது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கங்குவா வெளியாகிறது. இந்த நிலையில், கங்குவா படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசித்து வந்தவர் அர்ஜூன் லால். இவரிடம் கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரூபாய் 20 கோடி கடன் பெற்றுள்ளது. அர்ஜூன் லால் தற்போது காலமாகிவிட்டார். இவர் திவாலானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அர்ஜூன்லாலுக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதுவரை ரூபாய் 20 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
குழப்பத்தில் ரசிகர்கள்:
இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடன் தொகையான ரூபாய் 20 கோடியை வரும் 13ம் தேதி ( நாளைக்குள்) செலுத்தாவிட்டால் கங்குவா படத்தை வௌியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கங்குவா படம் வெளியாவதில் புதிய சிரமம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் 20 கோடியை நாளைக்குள் செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்பதால் படம் வெளியாகுமா? அல்லது படத்தின் ரிலீஸ் மேலும் தாமதம் ஆகுமா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
பிரம்மாண்ட பட்ஜெட்:
கங்குவா படத்திற்கு பல திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி, டிக்கெட் விற்பனை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கங்குவா படம் வெளியாகுமா? ஆகாதா? என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்த படம் ரூபாய் 350 முதல் ரூபாய் 400 கோடி வரை பட்ஜெட்டில் உருவாகிய படம் ஆகும்.
இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதோனி, கோவை சரளா, விடிவி கணேஷ் என பலரும் நடித்துள்ளனர்.