Actor Soori: 'குரூப் டான்சர் டூ கதாநாயகன்' சூரிக்கு திருப்புமுனை தருமா வெற்றிமாறனின் விடுதலை?
தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலம் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களில் ஒருவரான சூரி காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு பேக் டான்சராக நடனமாடும் காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது.
குரூப் டான்ஸர் டூ சீரியஸ் போலீஸ்
மக்கள் செல்வன் என தமிழ்நாடு தொடங்கி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி என்னதான் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் நடிகர் சூரியின் பக்கமே திரும்பியுள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் “எல்லா கோட்டையும் அழிங்க... மறுபடி முதல்ல இருந்து சாப்பிட்றேன்” என ஒரே வசனத்தில் கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி பரோட்டா சூரி என அடைமொழியுடன் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சூரி.
கடின உழைப்பு
இந்நிலையில், முதன்முறையாக காமெடி ட்ராக்கிலிருந்து மாறி, சீரியஸான காவல் துறை அதிகாரியாக சூரி இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், தன் கதாபாத்திரத்துக்காக உடம்பை முறுக்கேற்றுவது தொடங்கி,பலவகையிலும் மெனக்கெட்டு கோலிவுட் ரசிகர்களை சூரி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
முன்னதாக இணையத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோக்களின் வழியாக சூரியின் கடின உழைப்பு வெளிப்பட்டு, ரசிகர்களை பெருமளவு ஈர்த்து எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
காதலுக்கு மரியாதையில் டான்சர்
இந்நிலையில் சூரி குறித்த பல சுவாரஸ்யத் தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலம் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களில் ஒருவரான சூரி காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு பேக் டான்சராக நடனமாடும் காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.
காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற ‘அய்யா வீடு திறந்து தான் கிடக்கு’ எனும் இளையராஜா பாடிய பாடலில் சூரி பின்னணி டான்சர்களில் ஒருவராக ஆடிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, வளர்ச்சி இப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல காயங்கள், தையல்கள்...
முன்னதாக விடுதலை படத்துக்கான தன் உழைப்பு குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்திருந்த சூரி, “விடுதலை படத்தின் படப்பிடிப்பு எனக்கு கடினமானதாக தான் இருந்தது. பல காயங்கள் ஏற்பட்டன. பல தையல்கள் போடப்பட்டன.
அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது படப்பிடிப்பை ஒத்திவைக்க குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் படப்பிடிப்பு தாமதம் ஆவதை நான் விரும்பவில்லை. அதனால் சிகிச்சை முடிந்து உடனடியாக செட்டுக்குத் திரும்பி நடிக்கத் தொடங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சூரியின் விடுதலை பட கதாபாத்திரம் அவரது திரை வாழ்வில் திருப்புமுனையாக அமையுமா? சூரி எனும் நடிகரை அடுத்தக்கட்ட திரைப்பயணத்துக்கு இட்டுச் செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.