சூர்யா படப்பிடிப்பில் சூரியின் பிறந்தநாள் விழா! ஒட்டுமொத்த டீமும் கொண்டாட்டம்!
தமிழ்த்திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரியின் பிறந்தநாள், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூரி. தொடக்க காலத்தில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். பின்னர், சிவகார்த்திகேயன், விமல், கார்த்தி, ஜெயம் ரவி, அதர்வா என்று பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். மேலும், அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்தார். தற்போது, ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
அவரது 44வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூரி தற்போது நடிகர் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். கிராமிய மண்வாசனையில் பல வெற்றிப்படங்களை எடுத்த இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூரியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தாள் விழாவில், மூத்த நடிகர் சத்யராஜ், படத்தின் கதாநாயகனான நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், பழைய ஜோக் தங்கராஜ், புகழ், எம்.எஸ். பாஸ்கர், மூத்த நடிகை சரண்யா, நடிகை தேவதர்ஷினி, நடிகர் தீனா ஆகியோர் பங்கேற்றனர்.
நடிகர் சூரி இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார். அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், களவாணி, கேடி பில்லாடி கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, சுந்தரபாண்டியன் ஆகிய படங்களின் நகைச்சுவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
பல படங்களில் நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விடுதலை என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் சூரி போலீஸ்காரராக நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என்று மாபெரும் ஹிட்களை கொடுத்த வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்காக சூரி தனது தோற்றத்தை கடுமையான உடற்பயிற்சி மூலம் மாற்றியமைத்துள்ளார். அதேநேரத்தில், பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொம்ப நன்றிங்க @Suriya_offl அண்ணன் @pandiraj_dir அண்ணன் #sathyaraj சார் @sunpictures குழுமம்🙏🙏🙏 ❤️#EtharkkumThunindhavan #shootingspot @RathnaveluDop sir @priyankaamohan pic.twitter.com/DXzPnNb7Qa
— Actor Soori (@sooriofficial) August 27, 2021