உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்.. கட்டி அணைத்து நன்றி சொன்ன சைஃப் அலிகான்!
தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து நன்றி தெரிவித்துள்ளார் சைஃப் அலிகான்.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்தப்பட்டு, ஆறு நாட்களுக்குப் பிறகு சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இக்கட்டான சூழலில் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து நன்றி தெரிவித்துள்ளார் சைஃப் அலிகான்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர் சைஃப் அலிகான். இந்தி திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகரான இவர், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கணவர் ஆவார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான தேவாரா படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்:
இவர் மும்பையில் உள்ள பாந்த்ராவில் வசித்து வருகிறார். நேற்று இரவு, இவரது வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர் ஒருவர், இவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், சைஃப் அலிகானுக்கு காயம் ஏற்பட்டது. வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சைஃப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராஹிம், லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
வீட்டில் பல கார்கள் இருந்தபோதிலும், அந்த சமயத்தில் ஓட்டுநர் இல்லாத காரணத்தால் சைஃப் அலிகானை அவரது மகன் ஆட்டோவில் அழைத்து சென்றார். தொடர் சிகிச்சைக்கு பிறகு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் சைஃப் அலிகான் நேற்று செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஆபத்தான கட்டத்தில் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து நன்றி தெரிவித்துள்ளார் சைஃப் அலிகான். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கட்டி அணைத்து நன்றி சொன்ன சைஃப் அலிகான்:
சைஃப் அலிகான் உடனான சந்திப்பு குறித்து பேசிய பஜன் சிங் ராணா, "அவரை (சைஃப் அலிகான்) சந்திக்க மதியம் 3:30 மணிக்கு நேரம் கொடுத்தார்கள். நான் ஓகே சொன்னேன். ஆனால், 5 நிமிடங்கள் சிறிது தாமதமாக சென்றேன்.
பின்னர், நாங்கள் சந்தித்தோம். நாங்கள் உள்ளே சுற்றிக் கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினரும் அங்கே இருந்தனர். அவர்கள் அனைவரும் கவலைப்பட்டார்கள். ஆனால், எல்லாம் நன்றாக சென்றது. அவருடைய தாயும் குழந்தைகளும் அங்கே இருந்தனர். நான் மரியாதையுடன் நடத்தப்பட்டேன்.
சந்திக்க என்னை அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. சந்திப்பில் சிறப்பு என எதையும் சொல்ல முடியாது. இது ஒரு சாதாரண சந்திப்பு. நான் அவரிடம் சொன்னேன். 'சீக்கிரம் குணமடையுங்கள், நான் உங்களுக்காக முன்பு பிரார்த்தனை செய்தேன். நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன் என கூறினேன்" என்றார்.

