Raghava Lawrence: எம்.ஜி ஆர் மாதிரி இல்லனாலும்.. அம்மா பிறந்தநாளில் அறக்கட்டளை தொடங்கிய ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!
Raghava Lawrence - Maatram: தனது அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ்
குரூப் டான்ஸராக இருந்து, பின் நடன இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தைப் பிடித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இதற்கு பின் படிப்படியாக நடிப்பு, இயக்கம் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சினிமா தவிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியாக நடனம் கற்பிப்பது, அவர்களின் நலனுக்கு பல நலத் திட்டங்களை தன்னார்வல நிறுவனங்களின் உதவியுடம் முன்னெடுப்பது என களச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அம்மாவின் பிறந்தநாள்
எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்தில் எல்லாம் ராகவா லாரன்ஸ் குறிப்பிடும் இரண்டு பெயர்கள் ஒன்று அவரது அன்னை, மற்றொரு பெயர் அவர் வழிபடும் ஸ்ரீ ராகவேந்திரா. தனது தந்தையின் மேல் இருக்கும் பாசத்தில் அவருக்கென சிலை வைத்து கோயிலே கட்டியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படியான நிலையில் இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அன்னையின் பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார் . தனது எக்ஸ் பக்கத்தில் “இன்று என் அம்மாவின் பிறந்தநாள், உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் தேவை” என்று அவர் பதிவிட்டு தன் அன்னையுடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Hi Everyone, Today is my mothers birthday. I need all your wishes and blessings! 😊 pic.twitter.com/BEE5o3zKuu
— Raghava Lawrence (@offl_Lawrence) May 2, 2024
சேவையே கடவுள் அறக்கட்டளை
சேவையே கடவுள் அறக்கட்டளை இப்படியான நிலையில் ’சேவையே கடவுள்’ என்கிற அறக்கடளை ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளையில் லாரன்ஸூடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட இருக்கிறார்கள். சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்கிற செயல்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இந்தத் திட்டத்தின் வழியாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்ய இருக்கிறார். இதம் முதல் கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் 10 கிராமத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசியவதாவது:
“என்னை இந்த அளவுக்கு வளர்த்தது என் அம்மாதான். என் சின்ன வயதில் என் மகனை எம்.ஜி ஆர் மாதிரி வளர்ப்பேன் என்று அம்மா சொல்லியிருக்கிறார். அப்போது எல்லாரும் சிரித்திருக்கிறார்கள். எம்.ஜி ஆர் அளவுக்கு இல்லை என்றாலும் அவரில் சிறிய அளவிலாவது நான் செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.