R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
நான் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகளை இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறையினர் மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

படைப்புத்திறன் நம்மிடம் இருந்தால் சினிமாவில் வெற்றி பெறலாம் என நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் பார்த்திபனிடம் சினிமாவில் நுழைவது கஷ்டமா அல்லது அந்த வாய்ப்பை தக்க வைப்பது கஷ்டமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சினிமாவில் நுழைவதைக் காட்டிலும் அதனை தக்கவைப்பது தான் மிகவும் கடினம். வாய்ப்பு கூட எப்படி வேண்டுமானாலும் வந்து விடும். ஆனால் அது வெற்றியாக மாறுமா என்பது தெரியவிலை. முதல் படம் வெற்றிக்கூட ஏதாவது ஒரு காரணத்தால் அமைந்து விடும். எனக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பார்க்கும்போது எப்படி இவ்வளவு மாறுபட்ட வேடங்கள் பண்ண முடிகிறது?.. இதற்கு மேல் அடுத்த படத்தில் என்ன பண்ண முடியும் என்ற கேள்வி தான் எழுந்தது.
ஒரு படத்தில் புதிதாக நடிப்பது என்பது சவாலான விஷயமாக சிவாஜிக்கு இருந்திருக்கும். நான் பாக்யராஜின் முதல் பார்வை மாதிரி ஒரு படம் பண்ணி வெளியே வந்திருந்தால் அப்போதைய முன்னணி இயக்குநர்களாக இருந்த மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் போன்றவர்கள் மாதிரி மாறியிருப்பேன். முக்கோண காதல் கதை தான் என்னிடம் இருந்தது. ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் புதிய பாதை மாதிரி படம் என்னால் கொடுக்க முடிந்தது.
எந்த ஹீரோவும் கால்ஷீட் கொடுக்கவில்லை. அதனால் நானே ஹீரோவாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கமர்ஷியலாக அப்படி ஒரு வெள்ளி விழா படத்தைக் கொடுத்து விட்டு அடுத்து என்ன பண்ணுவது என்பது தான் கேள்வியாக இருந்தது. அந்த போராட்டம் மிகவும் கடினமானது. நான் கீழே விழுந்து வாரி மண்ணை கவ்வி 35 வருடமாகி விட்டது. சிவாஜிக்கு அவரது சகோதரர்கள் இருந்ததால் ஒரு சப்போர்ட் இருந்தது. எனக்கு அப்படி யாரும் இல்லை.
புதிய பாதைகள் படத்திற்கு பின் சுகமான சுமைகள் என்ற படம் எடுத்தேன். என்னுடைய முதல் தயாரிப்பு தான். நாம் நினைத்த படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் தயாரிப்பாளராக மாற காரணம் அமைந்தது. நான் புதிய பாதை நடிக்கும்போது என் சம்பளம் ரூ.70 ஆயிரம். இரண்டாவது படமான பொண்டாட்டி தேவைக்கு ரூ.19 லட்சம் சம்பளம் பெற்றேன். 3வது படமாக 1991ல் சுகமான சுமைகள் எடுத்தேன். சுமார் ரூ.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அதன்பின் உள்ளே வெளியே சூப்பர் ஹிட்டானது.
தோல்வியால் நாம் சோர்ந்து போய்விடக்கூடாது. படைப்புத்திறன் நம்மிடம் இருந்தால் வெற்றி பெறலாம். குடைக்குள் மழை படம் தோல்வியடைந்தது. நான் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகளை இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறையினர் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். ஒத்த செருப்பு படத்தை ஏற்காத மக்கள் தான் இரவின் நிழல் படத்துக்கு முதல் காட்சியை ஹவுஸ்ஃபுல் ஆக்கினார்கள்.
ஒரு படம் ஏதோ ஒரு காரணத்தினால் வெற்றியடைகிறது என்றால் இன்னொரு படமும் அதே காரணத்தால் வெற்றியடையாது. 90களில் இந்த மாதிரி கதை அமைப்பு இருந்தது. ஒரே மாதிரி கதை கொண்ட படம் பண்ணால் வெற்றியடைவது கஷ்டம் தான். புதிய முயற்சிகளை இந்த தலைமுறையினர் வரவேற்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு தான் சினிமாவில் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















