(Source: ECI/ABP News/ABP Majha)
Mohan : தோழிகள் ஷோபா, சில்க் ஸ்மிதா பற்றி மோகன் சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்..
Mohan : ஷோபா மற்றும் சில்க் ஸ்மிதாவின் இழப்பு குறித்து மனம் வருத்தப்பட்ட நடிகர் மோகன்.
80ஸ் காலகட்டத்தில் ரசிகைகளின் ரோமியோவாக, சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மோகன். பல காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகர் மோகன் தற்போது திரையுலகிற்குள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 14 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஹரா' ஆக்ஷன் திரில்லர் படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார் நடிகர் மோகன். ஜூன் 7ம் தேதி வெளியான அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படங்களை தொடர்ந்து வேறு பல படங்களிலும் கமிட்டாகி உள்ளார் நடிகர் மோகன்.
தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நடிகர் மோகன் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவரின் திரைப்பயணம், அனுபவம் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்படி அவர் பேசுகையில் தனக்கு சினிமா துறையில் மிகவும் நல்ல தோழிகளாக இருந்து எதிர்பாராதவிதமாக சோகமான ஒரு முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நடிகை ஷோபா மற்றும் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பேசி இருந்தார்.
1980ம் ஆண்டு இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் நடிகர் மோகன், ஷோபா, பிரதாப் போத்தன், பானு சந்தர் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் எவர்கிரீன் கிளாசிக் திரைப்படம் 'மூடுபனி'. இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளனர். நடிகை ஷோபா பற்றி மோகன் பேசுகையில் "சினிமா துறையில் நான் நுழைந்ததும் எனக்கு கிடைத்த மிக நல்ல தோழி ஷோபா.
நாங்க இரண்டு பேரும் சேர்ந்து சிரிச்சு சிரிச்சு நடிச்ச சீன் ஒன்று இருக்கிறது. கன்னடத்தில் 'அபர்ச்சிதா' என்ற படத்தில் நான் ஷோபாவை பாலியல் வன்கொடுமை செய்வதுபோல ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த காட்சியில் நடிக்கும்போது நானும் ஷோபாவும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். இயக்குநர் காசிநாத் எங்களை திட்டிகிட்டே இருந்தார்.
தன்னடக்கமான நல்ல பொண்ணு. மனசுல எதுவுமே வைச்சுக்கமாட்டார். அவர் மட்டுமில்லை அவருடைய மொத்த குடும்பத்தையே எனக்கு மிகவும் நன்றாக தெரியும். அம்மா, சித்தப்பா இப்படி பேசி பழகி இருக்கிறேன். யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு நல்ல தோழியை நான் இழந்துவிட்டேன். ரொம்ப நல்ல பொண்ணு பழக கூட மிகவும் இனிமையானவர்.
ஷோபாவை போலவே எனக்கு மிக நல்ல தோழியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவரும் மிக நன்றாக பழக கூடியவர். பேசவும் பழகவும் எந்த ஒரு தயக்கமும் இருக்காது. அவருடைய இழப்பும் மிக பெரிய இழப்பு என்றார் நடிகர் மோகன்.