Actor Karunas: ஐயா! என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தீட்டாங்க; நடவடிக்கை எடுக்கனும் - காவல்துறையிடம் கருணாஸ் குமுறல்
நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முன்னாள் அதிமுக பொறுப்பாளர் ஏ.வி. ராஜூ மீது புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ.வி. ராஜூ சமீபத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பேசினார். அப்போது நடிகை த்ரிஷா பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். மேலும் நடிகரும் அப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கருணாஸ் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர் சேரன் தொடங்கி தமிழ் சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நடிகை த்ரிஷாவும் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஏ.வி.ராஜூ வெளியிட்ட வீடியோவில் நான் த்ரிஷாவை பற்றி தவறாக பேசவில்லை. அவரை போன்றவர் என்றே குறிப்பிட்டேன். அது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது என சொல்லி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “ முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நான் நடிகராகவும் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறேன். மேலும் தமிழ் நாடு நடிகர் சங்கத்தில் துணை தலைவராகவும் இருந்து வருகிறேன். இந்த சூழ்நிலையில் நேற்று 19.02.2024 அதிமுக நிர்வாகி ஏவி ராஜூ என்பவர் தனியார் பத்திரிக்கை பேட்டியில் பல்வேறு பொய்யான தகவலையும் மற்றும் சங்கதிகளையும் என் மீது வன்மம் கொண்டு அவதுறாக மற்றும் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார். மேலும் அதில் நடிகை திரிஷா பற்றியும் என்னையும் தொடர்பு படுத்தி கூவதூரில் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றும் மற்றும் நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றும் உண்மைக்கு மாறாக பொய்யான செய்தியை விளம்பரத்துக்காக பேட்டி கொடுத்துள்ளார். அதில் இமி அளவு உண்மை இல்லாத பொழுதும் மேற்படி பத்திரிக்கை வீடியோ ஆனது பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி உள்ளது. அதனை தொடர்ந்து பல YOU TUBE சேனலிலும் என்னை பற்றியும் மற்றும் திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும் மேற்படி நபர் எந்த ஆதாரம் இன்றி கொடுத்த பொய்யான பேட்டியால் என் பெயருக்கும் மற்றும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். மேற்படி உண்மைக்கு மாறான பேட்டியின் காரணமாக நான் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகி உள்ளேன்.
எனவே ஐயா அவர்கள் மேற்படி நபர் மீதும் மற்றும் பல you tube சேனல்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுத்து மேற்படி வீடியோ பதிவினை நீக்க உத்திரவு பிறபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.