வா வாத்தியார் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜனநாயகன் ரிலீஸ் தாமதம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி
Vaa Vaathiyaar : வா வாத்தியார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயின் ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் குறித்து நடிகர் கார்த்தி பேசினார்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கி கார்த்தி நடித்துள்ள திரைப்படம் வா வாத்தியார். நாளை ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய கார்த்தி வா வாத்தியார் படத்தின் தாமதம் பற்றியும் விஜயின் ஜனநாயகன் ரிலீஸ் குறித்தும் பேசினார்.
நாளை வெளியாகும் வா வாத்தியார்
இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாக இருந்தன. ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சர்ச்சையில் சிக்கி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஒரு சில மாதங்களுக்கு அடுத்து வெளியாக இருந்த சில படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன. அந்த வகையில் மோகன் ஜி இயக்கியுள்ள திரெளபதி 2 , மற்றும் கார்த்தியின் வா வாத்தியார் ஆகிய படங்கள் கவனிக்கத் தக்கவை
சூது கவ்வும் , காதலும் கடந்து போகும் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் வா வாத்தியார். கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், பி.எல்.தேனப்பன், வித்யா போர்கியா, நிவாஸ் அத்திடன், மதுர் மிட்டல் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நாளை படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்று சென்னையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது
வா வாத்தியார் பற்றி கார்த்தி
இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில் " என்னுடைய முதல் படமும் பல்வேறு தடைகளை கடந்துதான் வெளியானது. இரண்டாவது படமும் அப்படிதான். அதனால் தடைகள் எனக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆனால் ஞானவேல்ராஜா இருந்த நிலைமையில் அவர் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவருக்கு சொன்னேன். நான் என்ன யோசிப்பேன் என்று நினைத்து நீங்கள் கவலைப்படாதீர்கல். ஏனால் இருக்கும் எல்லா போராட்டங்களை கடந்து ஜெயிச்சிடனும்னு ஓடிக்கொண்டு நாம் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஒரு நல்ல கதை அதற்கு தேவையான இயக்குநர் , தயாரிப்பாளர் , மற்றும் நடிகர்களை அதுவே முடிவு செய்துகொள்ளும் என்று சினிமாவில் நிறைய பேர் சொல்வார்கள். அதை நம்பினால் நாம் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம். இல்லையென்றால் இந்த மாதிரியான தாமதங்கள் ஏற்படும் போது அதை நினைத்து பதற்றம் அடைவோம். நம் கையில் இல்லாத விஷயங்களுக்காக நாம் பதற்றப்பட தேவையில்லை. அந்த வகையில் பல தடைகளை கடந்து இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் இரவுப் பகலாக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப வருடங்களுக்கு பின் எனக்கு ஒரு பொங்கல் ரிலீஸ் என்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி " என்றார்.
ஜனநாயகன் பற்றி நடிகர் கார்த்தி
விஜயின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பேசுகையில் " வீட்டில் சில நேரங்களில் ரொம்ப சோர்வாக இருக்கும் போது நடப்பது எல்லாம் நல்லதுக்கே என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அது அப்போ எனக்கு புரியாது. ஆனால் எல்லா விஷயம் நடப்பதற்கும் ஒரு சரியான திட்டம் இருக்கிறது. அந்த வகையில் விஜயின் ஜனநாயகன் படம் மிகச் சரியான நேரத்தில் வெளியாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் வெளியாக இருக்கும் எல்லா படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும். நன்றி " என்று கூறினார்





















