Daniel Balaji: கெளதமோட அம்மாதான் என்னை நடிக்க வெச்சாங்க.. டேனியல் பாலாஜியின் ப்ளாஷ்பேக்
இயக்குநர் பயணத்தை தொடங்க நினைத்து, சீரியலுக்குச் சென்று, பின்னர் நடிகராக சினிமாவுக்கு எப்படி வந்தார் என்பதை இயக்குனர் கவுதமுடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார் டேனியல் பாலாஜி.
யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நடிகர் டேனியல் பாலாஜியை கௌரவிக்கும் அவரின் நினைவுகள் சில...
தனித்துவமான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் டேனியல் பாலாஜி. பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், கவுதம் வாசுதேவ் மேனனின் பாடங்களில் அவரது அறிமுகமும், நடிப்பும் பலரால் கவனிக்கப்பட்டது. இயக்குனர் பயணத்தை தொடங்க நினைத்து, சீரியலுக்குச் சென்று, பின்னர் நடிகராக சினிமாவுக்கு எப்படி வந்தார் என்பதை இயக்குனர் கவுதமுடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார் டேனியல் பாலாஜி. இதோ அந்த பேட்டி...
‛‛இயக்குனராக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நடிகரை சந்தித்தேன். அவர் ஓராண்டிற்கு பின் கால்ஷீட் தருகிறேன் என்றார். அந்த ஓராண்டு வரை என்ன செய்யப் போகிறோம் என்று பயந்து போனேன். அப்போது ஒரு கம்பெனியில் இருந்து அழைப்பு வருகிறது. சரி, எடிட்டிங் அல்லது சவுண்ட் ரெக்கார்டிங் என ஏதோ ஒரு வேலை வரப்போகிறது, சரி, இப்போதைக்கும் போவோம் என நானும் போனேன். அங்கு போனால், நடிக்க வேண்டும் என்றார்கள்.
சரி, யாருக்கும் தெரியாமல் சைலண்டாக நடித்து விடுவோம் என்று நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். சித்தி சீரியலில் அப்படி தான் நடிக்க வந்தேன். சீரியல் ஒளிபரப்பான 3 வாரத்திற்கு பிறகு தான், என் பெற்றோரே என்னை கண்டுபிடித்தார்கள். அப்போதும் அவர்கள் உறுதி செய்ய என்னிடம் தான் கேட்டார்கள். ‛அது நான் இல்லை’ என நானும் தவிர்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் தான் அலைகள் என்கிற சீரியலும் நடித்துக் கொண்டிருந்தேன்.
அதை பார்த்து விட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், இவனை முதலில் பார்க்கும்போது வேறு மாதிரி இருந்தான், இப்போ வேறு மாதிரி இருக்கான். இவனிடம் நல்ல டீட்டைல் இருக்கு, இவனை சினிமாவில் நடிக்க வைடா’ என்று என்னை, கவுதம் வாசுதேவ் மேனனிடம் அவரது அம்மா தான் அறிமுகம் செய்து வைத்தார். காக்க காக்க தெலுங்கு படத்தின்போது, வேறு ஒரு வில்லன் இருப்பதாக இருந்தது. கவுதமுக்கு அந்த வில்லன் மீது திருப்தியில்லை. அப்போது என்னிடம் பேசும் போது சொன்னார், ‛மச்சான்... என்னோட அடுத்த படத்திற்கு நீ தாண்டா வில்லன்’ என்று. ‛சினிமாவில் இதெல்லாம் வரும்... எதுக்கு இப்படி சொல்ற’ என நானும் கூறினேன்.
அடுத்த படம் ஆரம்பிக்கும்போது, ”நான் தான் வில்லன்” என வந்தது. பின்னர் தயாரிப்பு காரணங்களால் அது நிறுத்தப்பட்டது. அடுத்த படத்தில் நான் நடித்தேன். ஆனால், அது ட்ராப் ஆயிடுச்சு. எங்கள் நண்பர் ஒருவர் வந்து என்னிடம் கூறினார். ‛டே மச்சான்... உன்னை வில்லனா போட்டா கவுதம் படம் ட்ராப் ஆகுது... பேசாமா நீ நடிக்கலைன்னு சொல்லு.. அவனாவது படம் பண்ணுவான்ல’ என்றார். ‛டேய்... நானாடா நடிக்கிறேன்னு சொன்னேன்... அவர் தான்டா கூப்பிட்டாருனு’ சொன்னேன். அதுக்கு பிறகு அலுவலகத்திற்கு நான் செல்வதை தவிர்த்துவிட்டேன்.
வேட்டையாடு விளையாடு பூஜையன்று நான் கால் செய்து வாழ்த்தினேன். ‛அழைப்பிதழ் அனுப்ப கூறினேனே ஏன் வரவில்லை’ என கேட்டார். அழைப்பிதழ் வரவில்லை, எனக்கு தெரியாது என்றேன். சரி நீ வா என்றார். நானும் அங்கு சென்றேன். எல்லாரும் லைனாக நின்றார்கள். வில்லன் வருகிறான், அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன் என என்னை எண்ட்ரி செய்தார். ‛கமல் சார் கூட இவனா...’ என பலரும் பேசினார்கள். அதற்காகவே எல்லாம் செய்யலாம் எனத் தோன்றியது,’’
என்று டேனியல் பாலாஜி கூறினார். அதே உரையாடலில் பேசிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறுகையில்,
‛‛என்னோட விமர்சகர் என்னோட அம்மாதான்; என் சினிமாவை அவங்க கூர்ந்து கவனிப்பாங்க. காக்க காக்க படத்தில் தூது வருமா பாடலுக்கு ‛கேமரா ஏன் அங்கே போச்சு...’ என என்னிடம் கேட்டாங்க. அவங்களிடம் எனக்கு பதிலே சொல்ல முடியவில்லை. அதன் பின் எந்த காட்சி எடுத்தாலும், அம்மாவிடம் பதில் சொல்ல வேண்டுமே என்று தான், அவற்றை எடுப்பேன். வேட்டையாடி விளையாடு எழுதும் போதே, அதற்கு பாலாஜி தான் சரியாக இருப்பார் என தோன்றியது. கமல்-பாலாஜிக்கு இடையே நிறைய காட்சி தொடர்பு இருந்தது. கமல் சார் வெளிநாட்டில் தோண்டி எடுக்கும் சடலங்களை கூட பாலாஜி தான் தயார் செய்தார்” என்று கூறினார்.