Captain Movie: கேப்டன் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ள ஆர்யா!
விரைவில் வெளியாகவுள்ள கேப்டன் படத்திற்காக நடிகர் ஆர்யா ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்!
‘கேப்டன்’ திரைப்படம்
தமிழ் திரையுலகின் ஹான்சம் ஹீரோ ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் கேப்டன். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இவர், ஏற்கனவே நடிகர் ஆர்யாவை வைத்து டெடி படத்தை இயக்கியிருந்தார். ஜகமே தந்திரம் படத்தில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா லக்ஷமி கேப்டன் படத்தில், ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், நடிகைகள் சிம்ரன், காவ்யா ஷெட்டி மற்றும் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், சுரேஷ் சந்திர மேனன், தியாகராஜன் உள்ளிட்டோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். டி இமானின் இசையில் படம் தயாராகியுள்ளது. இம்மாதம் 8-ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
View this post on Instagram
படத்தின் ப்ரமோஷன்:
கேப்டன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பேன்டசி மற்றும் சாகசம் நிறைந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது. காட்டில் வாழும் பெயர் தெரியாத கொடூர மிருகத்தை அழிக்கும் முயற்சியில் ஆர்யாவின் குழு இறங்குகிறது. அவர்கள் ஜெயித்தார்களா இல்லையா என்பது கதை. இதில், நடிகர் ஆர்யா வெற்றி செல்வன் என்ற இராணுவ வீரராக வருகிறார்.விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ‘ப்ரமோஷன்’ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடிகர் ஆர்யா இதற்காக புதிதாக ஒரு முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
கேப்டன் ‘பரேட்’!
வழக்கமாக ஒரு படம் ரிலீஸாகிறது என்றால், படக்குழு வெவ்வேறு ஊர்களுக்கு சென்று படம் சம்பந்தப்பட்ட நிகழச்சிகளை ஏற்பாடு செய்து படத்தை ப்ரமோட் செய்வர். இங்கேயும் அதே கதை தான். ஆனால், நடிகர் ஆர்யா அதையே சற்று வித்தியாசமாக செய்து வருகிறார். மூன்று நாட்களுக்கு கேப்டன் பரேட் ஷெட்யூல் போட்டு ஊர் ஊராக சென்று படம் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் நடிகர் ஆர்யா. கேப்டன் பரேட்டின் முதல் நாளான நேற்று, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர், அங்கே கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
ஆர்யாவிற்கு பிடித்த விஷயங்களில் சைக்கிள் பயணமும் ஒன்று. அந்த வகையில், கேப்டன் பரேடின் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மதுரையில் சக சைக்கிள் பிரியர்களை சந்தித்தார். பிறகு, ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார். அதன் பிறகு கோவை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்திக்கிறார். படம் ரிலீஸாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது!