Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல - நடிகர் அர்ஜூன் பேட்டி
பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
தான் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் அர்ஜூன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், சென்னை அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தார். அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய பிரதமர் மோடி இன்று காலை கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்சி செல்லும் அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்ல உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் செல்கிறார். இதனால் திருச்சி மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பொதுமக்களுக்கு சாமி தரிசன நேரம் மாற்றப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அந்த வகையில் நடிகர் அர்ஜூனும் குடும்பத்தினருடன் சென்று பிரதமரை சந்தித்தார். ஏற்கனவே பாஜகவை பல்வேறு வகைகளில் பலப்படுத்த திரைப் பிரபலங்களையும் கட்சியின் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் மேலிட பிரமுகர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அர்ஜூன் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘நான் பாஜகவில் எல்லாம் சேரவில்லை. அரசியல் என்பது எனக்கு அவ்வளவாக தெரியாது. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடியை பிடிக்கும். அவர் சென்னை வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்பாயின்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்ததால் சந்தித்து பேசினேன். என்னுடைய ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடியை வருமாறு அழைப்பு விடுத்தேன். அவரும் விரைவில் வருதாக சொல்லியிருக்கிறார்’ என கூறினார்.
அர்ஜூனின் அனுமன் கோயில்
தீவிர ஆஞ்சநேயர் பக்தரான அர்ஜூன் சென்னை போரூர் அருகேயுள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை தன்னுடைய சொந்த 20 ஏக்கர் நிலம் கொண்ட தொட்டத்தில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் நிறுவ கர்நாடகா மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் இருந்து சுமார் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனா 28 அடி உயரம், 17 அடி அகலம் கொண்ட அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயர் இருக்கும் சிலை செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.