Ajith-SS Chakravarthy: ராசி முதல் வரலாறு வரை..அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி பற்றி தெரியுமா?
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி அஜித்குமார் நடித்துள்ள 9 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். அமராவதி திரைப்படம் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமான இவர் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருகிறார். இவரது திரை வரலாற்றில் பல வெற்றிகளை பெற்ற திரைப்படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இவர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித்தின் திரை வாழ்வின் முக்கியமான கட்டத்தில் பல படங்களை இவர் தயாரித்துள்ளார், அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவராகவே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இருந்து வந்தார். இவர் தயாரித்த 14 படங்களில் 9 படங்கள் அஜித்தை வைத்து மட்டுமே தயாரித்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளியான படங்களை கீழே காணலாம்.
ராசி:
1997ம் ஆண்டு முதன்முறையாக அஜித்தை வைத்து ராசி என்ற படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்தார். அஜித் அப்போது சாக்லேட் பாயாக உலா வந்த காலம் அது. முரளி அப்பாஸ் இயக்கிய இந்த படம் பெரிய அளவில் வசூலை குவிக்காவிட்டாலும் நல்ல குடும்ப படமாக அமைந்தது.
வாலி:
1999ம் ஆண்டு அறிமுக இயக்குனராக வந்த எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வாலி. இந்த படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தியே தயாரித்திருந்தார். இந்த படம் இன்றளவும் அஜித்தின் மாஸ் ஹிட் படங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த படம் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.
முகவரி:
2000ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் முகவரி. இன்றளவும் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் திரைப்படம் முகவரி. வி.இசட். துரை அறிமுக இயக்குனராக அஜித்துடன் கூட்டணி அமைத்து இயக்கிய திரைப்படம் முகவரி. நிக் ஆர்ட்ஸ் – அஜித் கூட்டணியில் உருவான இந்த படம் மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சிட்டிசன்:
அஜித் ரசிகர்களுக்கு எப்போதுமே பேவரைட் படங்களில் ஒன்றாக இருப்பது சிட்டிசன். ரஜினிகாந்திற்கு எப்படி பாட்ஷாவோ, அதுபோல அஜித்திற்கு சிட்டிசன் என்றே சொல்லலாம். மிரட்டலான திரைக்கதை, அஜித்தின் ஏராளமான கெட்டப்புகள், வலுவான ப்ளாஷ்பேக் என்று அறிமுக இயக்குனரான சரவணன் சுப்பையா முதல் படத்திலே அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசாக தந்தார். இந்த படத்தை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
ரெட்:
அஜித் வித்தியாசமான தோற்றத்தில் நடித்த திரைப்படம் ரெட். ராம்சத்யா என்ற பெயரில் நடிகர் சிங்கம்புலி இயக்கிய இந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களுக்கு வசூல் ரீதியாக வெற்றியையே பெற்றது. இந்த படத்தையும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியே தயாரித்திருந்தார்.
வில்லன்:
ரெட் படம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும், அனுபவ இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வில்லன் திரைப்படம் வெளியானது. இரட்டை வேடத்தில் இந்த படத்தில் அஜித் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ஆஞ்சநேயா:
வல்லரசு படத்தை இயக்கிய மகாராஜன் இயக்கத்தில் அஜித் நடித்த ஆஞ்சநேயா திரைப்படம் ரிலீசானது. இந்த படம் தோல்விப்படமாக அமைந்தது. இந்த படத்தையும் நிக் ஆர்ட்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது.
ஜி:
2005ம் ஆண்டு பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் – திரிஷா நடிப்பில் வெளியான ஜி படம் ப்ளாப் ஆனது. அஜித் கேரியரில் சோதனையான காலகட்டங்களில் வெளியான படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்தையும் நிக் ஆர்ட்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது.
வரலாறு:
ஆஞ்சநேயா, ஜி என்று அடுத்தடுத்து அஜித்துடனான கூட்டணி தோல்வியில் இருந்த தருணத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வரலாறு படத்தை மீண்டும் கையில் எடுத்தனர் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம். கே.எஸ்.ரவிக்குமார் – அஜித் கூட்டணியில் 3 கெட்டப்பில் வெளியான வரலாறு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அஜித் பரத நாட்டியக் கலைஞராக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார்.
நிக் ஆர்ட்ஸ் – அஜித் கூட்டணியில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன்பின்பு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஜித் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடிக்கவில்லை. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சிம்புவை வைத்து காளை, வாலு படங்களையும் தயாரித்துள்ளனர். மேலும், விக்ரமின் காதல் சடுகுடு மற்றும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மகன் ஜானியை வைத்து ரேணிகுண்டா, 18 வயசு படங்களையும் நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளனர்.