Sivaranjani | சிவரஞ்சனியை ஞாபகமிருக்கா? டெப்யூட்டுக்கு ரெடியாகும் மகள் யார் தெரியுமா?
வாரிசு நடிகர்கள் என்ற ஒற்றை குவாலிஃபிக்கேஷனால் மட்டுமே சினிமாவில் சர்வைவ் செய்து விட முடியாது. அதற்கு கடின உழைப்பும் , பொறுமையும், மக்களை கவர்வதற்கான யுக்தியும் தெரிந்திருக்க வேண்டும்
வாரிசு நடிகர்கள் திரைக்களம் காண்பது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் இது வழக்கமான ஒன்றுதான். சிவாஜி கணேஷன் மகன் பிரபு, பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கமல் மகள்கள் அக்ஷரா, சுருதிஹாசன்,இயக்குநர் எஸ்.எ.சந்திர சேகர் மகன் விஜய், சத்தியராஜ் மகன் சிபிராஜ் என சொல்லிக்கொண்டே போகலாம். என்னதான் வாரிசு நடிகர்கள் மூன்று தலைமுறையாக, இரண்டு தலைமுறையாக சினிமாவை ஆண்டாலும், சில நடிகர்களுக்கு சினிமா எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது. வாரிசு நடிகர்கள் என்ற ஒற்றை குவாலிஃபிக்கேஷனால் மட்டுமே சினிமாவில் சர்வைவ் செய்து விட முடியாது. அதற்கு கடின உழைப்பும் , பொறுமையும், மக்களை கவர்வதற்கான யுக்தியும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியான வாரிசு நடிகர்களே சினிமாவில் நிலைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் 90’ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரீட்சியமான நடிகை சிவரஞ்சனி தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த தயாராகிவிட்டாராம்.1990ல் 'ஹ்ருதய சாம்ராஜ்யம்’ என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் சிவரஞ்சனி. அதே ஆண்டில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பிரபு, விஜயகாந்த், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, கலைஞன், செந்தமிழ் செல்வன் போன்ற பல படங்களில் நடித்தார். வசீகரிக்கும் கண்களுக்கு சொந்தக்காரியான சிவரஞ்சனி 90-களில் வாழ்ந்த இளசுகளின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கினார் சிவரஞ்சனி.
பீக்கில் இருக்கும் பொழுதே தன்னுடன் நடித்த தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கையில் நாட்டம் செலுத்தவில்லை சிவரஞ்சனி. சில காலங்களுக்கு பிறகு பக்தி படம் ஒன்றில் தலைக்காட்டினார் அதோடு சரி. சிவரஞ்சனி- ஸ்ரீகாந்த் தம்பதிகளுக்கு திருமணமாகி ரோஷன், ரோகன் என்ற இரண்டு மகன்களும் மேதா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கண்கள் முதற்கொண்டு அச்சு அசல் சிவரஞ்சனியை போலவே இருக்கும் தனது மகள் மேதாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முழு வீச்சில் இறங்கியுள்ளாராம் சிவரஞ்சனி. இதற்காக கதை கேட்கும் பணிகளில் இறங்கியுள்ளார்களாம் சிவரஞ்சனியும் அவரது கணவர் ஸ்ரீகாந்தும்.மேதா ‘ருத்ரமா தேவி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். தற்போது மேதாவிற்கு வயது 17 என கூறப்படுகிறது. முதலில் தெலுங்கு படத்தில் அறிமுகமாவாரா அல்லது தமிழ் படத்தில் மேதா அறிமுகமாவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.