சிறந்த நடிகர் தனுஷ்... துணை நடிகர் விஜய் சேதுபதி... டெல்லியில் தேசிய விருது பெற்ற முன்னணி பிரபலங்கள்!
டெல்லி: அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷும், சூப்பர் டீலக்ஸில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழில் இருந்து சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த படமாக அசுரனும், சிறந்த இசையமைப்பாளராக இமானும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக கே.டி. என்ற கருப்புதுரையில் நடித்த நாகவிஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், சிறப்பு ஜூரி விருதுக்கு பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதனையடுத்து விருது வழங்கும் விழா இன்று நடந்தது. விழாவில் பங்கேற்ற தனுஷ் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார். அவருக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதினை வழங்கினார்.
நடிகர் தனுஷ் அசுரன் படம் மூலம் இரண்டாவது முறையாக தேசிய விருதை பெறுகிறார். தொடர்ந்து அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
சிறந்த துணை நடிகர் விஜய் சேதுபதி:
அதேபோல், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்த விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவரும், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.
விருது பெற செல்வதற்கு முன்பாக விருது குறித்து பேசியிருந்த விஜய் சேதுபதி, “தேசிய அளவிலான கலைஞர்களை ஒரே இடத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தில்இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவை மட்டும் நம்பி நடித்தேன். தேசிய விருது பெறுவது மகிழ்ச்சி” என கூறியிருந்தார்.
சிறப்பு ஜூரி விருது:
மேலும் சிறப்பு ஜூரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கான விருதை அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த இசையமைப்பாளர்:
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக அப்பாடலின் இசையமைப்பாளர் இமானும் தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்