அபாரம்! 13 வயது தமிழக மாணவிக்கு நார்வே தமிழ் திரைப்பட விருது - என்ன படம்?
சிறந்த அனிமேஷ் திரைப்படத்திற்கான சர்வதேச விருதை தஞ்சாவூரைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது:
நார்வே தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த அறிமுக அனிமேஷன் படத்திற்கான விருதை கும்பகோணத்தைச் சேர்ந்த அகஸ்தி என்கிற 13 வயது சிறுமி வென்றுள்ளார். 7 ஆம் வகுப்பு படித்து வரும் அகஸ்தி ‘குண்டான் சட்டி’ என்கிற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானகி குழந்தைகள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 15 ஆவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த அறிமுக அனிமேஷன் படத்திற்கான விருது அகஸ்திக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த விருது தன்னை மேலும் படங்களை இயக்க வேண்டும் என்று ஊக்கமளிப்பதாக அகஸ்தி தெரிவித்துள்ளார்.
அகஸ்தி போன்ற மாணவிகள் சரியாக வழிநடத்தப் பட்டு முறையான பயிற்சி வழங்கப்படும் நிலையில் எதிர்காலத்தில் அவர் பெரியளவில் சாதிப்பார் என்று சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அனிமேஷன் துறையில் வளர்ந்து வரும் இந்திய சினிமா
அனிமேஷ் , வி.எஃப்.எக்ஸ் துறைகளைப் பொறுத்தவரை ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இந்திய சினிமா இன்னும் பின் தங்கிய நிலையிலே இருக்கிறது. பல திறமையான கலைஞர்களும் தொழில் நுட்பங்கள் இருந்தாலும் அதிகம் கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கும் படங்களுக்கு அமெரிக்க நிறுவனங்களையே திரைத்துறையினர் சார்ந்திருக்கிறார்கள். ஆனால் இதற்காக ஒரு சில நொடி காட்சிகளுக்கு கோடிக் கணக்கில் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது.
இதனால் முடிந்த அளவிற்கு இங்கு இருக்கும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இந்தியாவில் வெளியாகும் படங்கள் உருவாகின்றன. சமீபத்தில் வெளியாகிய ஆதிபுருஷ் மாதிரியான படங்களுக்கு கோடிக் கோடியாக செலவிட்டும் அவற்றின் தரம் சராசரிக்கும் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். பிரபாஸ் நடித்து அடுத்து வெளியாக இருக்கும் கல்கி படத்திற்கான வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் மேல் ரசிகர்களுக்கு மிகபெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
அனிமேஷன்:
ஒரு துறையாக அனிமேஷ் இந்திய திரைத் துறையில் வளருவதும் , சினிமாவில் இயக்குநர், நடிகர் ஆக வேண்டும் என்று இளைஞர்கள் ஆசைப் படுவது போலவே அனிமேஷ் மற்றும் கிராஃபிக்ஸ் துறைகளிலும் ஆர்வம் காட்டுவது அவர்கள் கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. இப்படியான துறை மேம்படுத்தல்களை கேரள மாநிலம் மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறது. அதேபோல் தமிழ் திரைத் துறையும் தமிழ்நாட்டு அரசுடன் சேர்ந்து இப்படியான முன்னெடுப்புகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்