Modi 3.0: மோடியால் இனி இதையெல்லாம் செய்ய முடியாது..! பாஜக ஆட்சி Vs கூட்டணியை நம்பிய ஆட்சி, என்ன வித்தியாசம்?
Modi 3.0: பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியின் பிரதமராக வரும் 8ம் தேதி, நரேந்திர மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Modi 3.0: பாஜக ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கும் இடையே உள்ள, வித்தியாசம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மக்களவை தேர்தல் முடிவுகள்:
நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டண் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் பிரதமராக, வரும் 8ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என கூறப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சிக்கும், இனி அமையப்போகும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக மோடியால் இனி தன்னிச்சையாக எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி:
கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்றதால், கூட்டணியை கட்சிகளை நாட வேண்டிய சூழல் ஏற்படவில்லை. இதனால், பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, ஜிஎஸ்டி மற்றும் நீட் தேர்வு போன்ற பல முக்கிய முடிவுகளை தன்னிச்சையாகவே செயல்படுத்தியது. குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த சட்டமசோதாவையும் மிக எளிதில் மக்களவையில் நிறைவேற்றி சட்டமாக்கியது. எதிர்க்கட்சிகளிடம் கருத்து கூட கேட்காமல் எதேச்சதிகார போக்கில் மோடியும், பாஜக ஆட்சியும் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை பாஜகவால் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ள முடியாது என தெரிகிறது.
மோடி 3.0 ஆட்சிக்கான கட்டுப்பாடுகள்:
முன்பு சுதந்திரமான தலைவராக செயல்பட்ட மோடிக்கு, இந்த ஆட்சி காலத்தில் அப்படி இருக்க முடியாது. தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து அவர்களின் கருத்துகளை உள்வாங்கியே எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டி இருக்கும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மோடியை மையப்படுத்தியே மொத்த அரசியல் நகர்வும் இருந்தது. ஆனால், அந்த சூழல் கூட்டணி ஆட்சியில் மாறும். மாநில அரசியல் கட்சி தலைவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். அதற்கு நேற்றைய பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படங்களே சான்று. பல முக்கிய இலாக்காக்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதால், பாஜகவிடம் குவிந்து கிடந்த அதிகாரம் பரவலாக்கப்படும்.
மாநில தலைவர்களின் ஆதிக்கம்:
கூட்டணி ஆட்சியில் மாநில கட்சி தலைவர்கள், தேசிய அரசியலில் மிக முக்கியப் பங்காற்றுவார்கள். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளனர். அதேபோல், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மு.க.ஸ்டாலினின் தி.மு.க போன்ற கட்சிகளும், பிராந்திய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என்பதால், பிராந்திய கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
அதிகார பரவலாக்கம்:
மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி செய்யும் "இரட்டை இன்ஜின் அரசாங்கம்" என்ற, பாஜகவின் கருத்து அதிக சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இது பல்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான பார்வையை திணிப்பதன் மூலம் கூட்டாட்சி கொள்கைகளை கீழறுப்பதாக எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. மக்களவையில் கிட்டத்தட்ட சமநிலையான பிரதிநிதித்துவம் இருப்பதால், அதிகப்படியாக அதிகார பரவலாக்க அணுகுமுறை இருக்கும்.
சீர்திருத்த திட்டங்களில் தாக்கம்:
பொருளாதார சீர்திருத்தங்கள் ஒரு முக்கியமான மையமாக இருக்கும். ஆனால், குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்ளும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பண்ணை சட்டங்கள் போன்ற பெரிய சீர்திருத்தங்களுக்கான முந்தைய முயற்சிகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தன மற்றும் ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. பெரும்பான்மை இருந்தபோதிலும், இந்த மாற்றங்களைச் செயல்படுத்த பாஜக சிரமப்பட்டது. குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சட்டங்களைத் திணிப்பதில் உள்ள சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் கூட்டணி ஆட்சியில், சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்த கூட்டணி கட்சியினரிடையே பாஜக ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். தனியார்மயமாக்கல் மற்றும் முதலீட்டு முயற்சிகள், குறிப்பாக வங்கித் துறையில், முன்னோக்கி நகர்த்த கவனமான பேச்சுவார்த்தை மற்றும் மூலோபாய திட்டமிடல் அவசியம்.
அதிகாரத்தை மறுசீரமைத்தல்:
பாஜக மற்றும் ஆர். எஸ்.எஸ் இடையே அதிகார இயக்கத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இருந்த தனிப்பெரும்பான்மை, முடிவெடுப்பதில் மோடிக்கு குறிப்பிடத்தக்க சுயாட்சியை அனுமதித்தன. ஆனால், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் மற்றும் ஆர்எஸ்எஸ் மறைமுக செல்வாக்கால், அதிகாரத்தில் மறுசீரமைப்பு இருக்கக் கூடும். புதிய அமைச்சரவை உருவாக்கம் இந்த அதிகார மறுசீரமைத்தலை பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது.