நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவியிடங்களுக்கு நாளை வேட்புமனு தாக்கல்
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. நாளை வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ஆம் தேதி நடக்கிறது என்றும் இதில் பதிவாகும் வாக்குகள் 22ஆம் தேதி எண்ணப்படும் என்றும் நேற்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் நேற்று மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
விழுப்புரம் மாவட்டம் :
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 3 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 102 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதேபோல் அனந்தபுரம் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 12 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், செஞ்சி பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், வளவனூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 108 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 5-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 7-ந் தேதி கடைசி நாளாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஏற்கனவே அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களப்பணியில் இன்னும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் ஈடுபட உள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்