AIIMS என எழுதப்பட்ட செங்கல்லை மு.க ஸ்டாலினுக்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவருக்கு AIIMS என்று எழுதப்பட்ட செங்கல்லை பரிசாக வழங்கினார்.
திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவருக்கு AIIMS என்று எழுதப்பட்ட செங்கல்லை பரிசாக வழங்கினார்.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. திமுக கூட்டணி 148 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 16 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களிலும், தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக 4 இடங்களிலும் முன்னிலை உள்ளது.
இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் வெற்றி அடைந்துள்ளார். தான் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் உதயநிதி வெற்றியை அறுவடை செய்துள்ளார். அதுவும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவருக்கு AIIMS என்று எழுதப்பட்ட செங்கல்லை பரிசாக வழங்கினார். 'கையோடு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளேன்' என்ற உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பிரசாரம் இந்த தேர்தலில் கவனிக்கப்பட்டது. அதனை குறிக்கும் விதமாக AIIMS என்று எழுதப்பட்ட செங்கல்லை ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார் உதயநிதி.