Trichy Corporation Election 2022 | தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் வெல்வது உறுதி - பிரேமலதா விஜயகாந்த்
’’திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாய் தொல்லைகளால் மக்கள் அவதியுறும் நிலை உள்ளது, இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்களை பாதுக்காப்போம்’’
திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற ஆளும் திமுக, பிரதான எதிர் கட்சியான அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் சுயேச்சைகளும் களம் காண்கின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மக்களை சந்திக்கும் போது வித்தியாசமான வாக்குகுறிதிகள் அளிப்பது, என வேட்பாளர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காந்தி மார்க்கெட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தலில் கேப்டன் விஜயகாந்த அவர்களின் ஆதரவு பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யவேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கேப்டன் உடல்நலத்துடன் உள்ளார். தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். யார் வெற்றி பெற்று வந்தால் உங்கள் வார்டுகளுக்கு நலத்திட்டங்கள் செய்வார்கள் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். அதிமுக, திமுக ஆட்சிகளில் பல உள்ளாட்சி பகுதிகள் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படவில்லை. தமிழகத்தில் பல உள்ளாட்சிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை தான் உருவாகி உள்ளது. ஆகையால் மக்களின் நலனை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும் கட்சி தேமுதிக மட்டும் தான். மேலும் தேமுதிக வெற்றி பெற்றவுடன், காந்தி மார்க்கெட் பகுதியில் ஷேர் ஆட்டோ வசதி செய்தி தரப்படும். வெற்றி பெறும் முன்னரே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்யும் தேமுதிக வேட்பாளர்கள், வெற்றி பெற்றால் இன்னும் பல நன்மைகள் செய்வார்கள்.
திருச்சியில் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் தீர்வு காணமால் இருக்கிறது. குறிப்பக சமீபகாலமாக திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாய் தொல்லைகளால் மக்கள் அவதியுறும் நிலை இருந்து வருகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாப்போம் என்றார். மேலும் பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். மக்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும், உடனடியாக தெரிவித்தால் தேமுதிக வேட்பாளர்கள் அதை உரிய நேரத்தில் சரி செய்வார்கள்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கு நல்ல திட்டங்களை யாரும் அறிவிக்கவில்லை, அதற்கு மாறாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்யும் கட்சியாக இருப்போம்.பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். தேர்தலை மனதில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக பொய் பிரச்சாரம் செய்வதாக பிரேமலதா குற்றம்சாடியுள்ளார். திருச்சி மட்டும் அல்ல தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார்.