TRB Rajaa Interview: கோவை அதிமுக பலம் வாய்ந்த பகுதி என்ற காலம் கடந்து ரொம்ப நாளாச்சு - டிஆர்பி ராஜா
கோவை காந்திபுரம் பகுதியில் தொழில் துறை அமைச்சரும், கோவையின் பொறுப்பு அமைச்சராகவும் உள்ள டிஆர்பி ராஜா ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக கோவையில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு அமைப்பினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தொழில் துறை அமைச்சரும், கோவையின் பொறுப்பு அமைச்சராகவும் உள்ள டிஆர்பி ராஜா ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.
கேள்வி : டெல்டா பகுதியில் இருந்து கொங்கு பகுதிக்கு பொறுப்பு அமைச்சராக நீங்கள் வரக் காரணம் என்ன?
பதில் : ”திராவிட நாயகனின் தொலை நோக்கு பார்வை தான் காரணம். கொங்கு பகுதியில் தொழில் வளர்ச்சிபெற வேண்டும் என்பதில் முதலமைச்சர் மிகத்தெளிவாக உள்ளார். என்னை தேர்தல் பணி மட்டுமின்றி, தொழிலதிபர், தொழில் முனைவோர், தொழிலாளர்களை சந்தித்து, இப்பகுதிக்கு எந்தெந்த தொழில்கள் கொண்டு வந்து வளர்ச்சியை கொண்டு வர வேண்டுமென கருத்து பெற வேண்டுமென முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தல் பணியோடு, தொழில் துறை சார்ந்த வளர்ச்சி என இரண்டு பணிகளையும் செய்ய வேண்டுமென முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பின்னரும் இரண்டு, மூன்று மாதங்கள் இருந்து அடுத்த கட்ட பணிகளுக்கான மிகப்பெரிய திட்டமிடலை செய்ய கூறினார். பிரமாண்டமான வளர்ச்சி கோவைக்கு காத்திருக்கிறது. அதற்கான திட்டமிடலுக்காகவும், தேர்தல் பணிக்காகவும் கோவைக்கு வந்துள்ளேன்”
கேள்வி : இந்த தேர்தலை போர் என நீங்கள் குறிப்பிடக் காரணம் என்ன?
பதில் : ”இந்த இனத்தை அழிக்க நினைப்பவர்களை ஒழிக்க வேண்டிய போராக இந்த தேர்தல் உள்ளது”
கேள்வி : அதிமுக பலம் வாய்ந்த பகுதியாக கருதப்படும் கோவையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில் : ”அது எல்லாம் காலம் கடந்து ரொம்ப நாளாச்சு. கடந்த தேர்தலில் 96 சதவீத இடங்களில் வெற்றி அடைந்துள்ளோம். இதை 100 சதவீத வெற்றியாக மாற்றுவது என்பது தான் எங்கள் நோக்கம்”
கேள்வி : இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்ச செருப்பு என அண்ணாமலை விமர்சனம் செய்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?”