Urban Local Body Election Result: பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய திமுக!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 122 இடங்களில் 84 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளது. தமிழ்நாட்டில் கடைசி முப்பத்தி எட்டாவது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இதுவாகும். மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன் கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளது.
இதில் நகராட்சிகளில் 60 வார்டுகளும், பேரூராட்சிகளில் 63 வார்டுகள் என மொத்தம் 123 வார்டுகள் உள்ளன. இதில், மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்னதாச்சி இறந்ததால் அந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தரங்கம்பாடி பேரூராட்சியில் இரண்டு அதிமுக வேட்பாளரும், 1 திமுக வேட்பாளர் என 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால், நகராட்சியில் 59 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சியில் 60 உறுப்பினர்கள் என மொத்தம் 122 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் திமுக 77 அதிமுக 23, பாமக 06, தேமுதிக 01, சுயேச்சை 07, விசிக 01, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 01, சிபிஐ 01, காங்கிரஸ் 03, மதிமுக 02 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட வாக்குப்பதிவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 65.81 சதவீத வாக்குகள் பதிவாயின. மயிலாடுதுறை நகராட்சியில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் கலைக்கல்லூரியிலும், சீர்காழி நகராட்சியில் பதிவான வாக்குகள் சீர்காழி சபாநாயகம் முதலியார் பள்ளியிலும், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டன. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பேரூராட்சிகளையும், மயிலாடுதுறை நகராட்சியும் திமுக கைப்பற்றியுள்ளது.
குத்தாலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 10, அதிமுக 3காங்கிரஸ் 1, பாமக 1 வெற்றி பெற்றுள்ளது. மணல்மேடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 8, காங்கிரஸ் 1, விசிக 1, அதிமுக 5 வெற்றி பெற்றுள்ளது. தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் அதிமுக 2 வார்டுகளிலும், திமுக 1 வார்டிலும் பேட்டியின்றி தேர்வாகியதை அடுத்து மீதம் 15 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதில் 13 திமுக, விசிக 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 10, அதிமுக 3, சிபிஐ 1, பாமக 1 வெற்றி பெற்று நான்கு பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டு வார்டுகளில் 19-வது வார்டில் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி என்பவர் உயிரிழந்ததை அடுத்து அந்த வார்டுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 35 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றதில் திமுக 24 காங்கிரஸ் 01, பாமக 02, அதிமுக 07, மதிமுக 01 வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மயிலாடுதுறை நகராட்சியை திமுக கூட்டணி 26 இடங்களுடன் கைப்பற்றியுள்ளது.
சீர்காழி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 11, மதிமுக 01, அதிமுக 03, தேமுதிக 01, பாமக 02, சுயேச்சை 06 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சீர்காழி நகராட்சியில் மட்டும் நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுகவிற்கு சற்று சாதகமற்ற சூழல் நிலவி வருகிறது.