(Source: ECI/ABP News/ABP Majha)
பட்டியலில் பெயர் இல்லை, அதிருப்தியடைந்த வாக்காளர்கள் போராட்டம் - கும்பகோணத்தில் நடந்தது என்ன?
ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் கணக்கன் தெருவுக்கு செல்லும் நடைபாலம் கடந்த 20 ஆண்டுகளாக உடைந்த நிலையில் உள்ளதை சீர் செய்து கொடுக்காததால் இந்த வார்டு மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அதிருப்தியடைந்த வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கோட்டூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்காளர் பட்டியலில் 170 வாக்காளர்களின் பெயர் விடுபட்டுள்ளது. இதனால், வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் பட்டியலில் பெயர் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என மைய அலுவலர்கள் கண்டிப்புடன் கூறினர். இதனால் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மண்டல துணை வட்டாட்சியர் பிரபா ராணி, போலீசார், துணை ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த தேர்தலில் வாக்களித்த 170க்கும் அதிகமானோரின் பெயர் விடுபட்டுள்ளது. இறந்தவர்கள் பெயர் அதிக அளவில் நீக்கப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறியதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது
இதேபோல் தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், கிராம மக்கள் மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். மாலை வரை யாரும் ஓட்டு போடவில்லை.
தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் 150 வீடுகளில் சுமார் 650 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தைச் சுற்றி மூன்று பகுதியிலும் விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வழியாக மட்டுமே பொதுமக்கள் ஊருக்குள் வந்து செல்கின்றனர். சுற்றியிருந்த அந்த கிராம மக்களின் நிலமும் அரசால் 35 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டு, விமானப்படை தளத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பள்ளிக்கூடம், குடிநீர் வசதி, சாலைவசதி, மினி பேருந்து, சுகாதார நிலையம், கிளை அஞ்சலக சேவை போன்ற அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகக் குறைத்துவிட்டன.
இந்த அடிப்படை வசதிகளை மீண்டும் நிறைவேற்றக் கோரி, இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக உயர் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இக்கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறி கடந்த ஏப்.8-ம் தேதி முதல் கிராமத்திலேயே பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்த கிராம மக்களும் புறக்கணித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ.இலக்கியா இனாத்துக்கான்பட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இக்கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்தனர்.
இதே போல் ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் கணக்கன் தெருவுக்கு செல்லும் நடைபாலம் கடந்த 20 ஆண்டுகளாக உடைந்த நிலையில் உள்ளதை சீர் செய்து கொடுக்காததால் இந்த வார்டு மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வாரத நிலையில், யாரும் நேற்று மாலை வரை வாக்களிக்கவில்லை.