கரூர் தேர்தல் களம் சூடுபிடிக்குமா? எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரப்புரை தீவிரம்! அதிமுக கூட்டணி வியூகங்கள் என்ன?
கரூரில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர்: அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 2026 மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தால் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பணிகளை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது தொகுதிக்குட்பட்ட பாலமபுரம் பகுதியில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று துண்டு நோட்டீசை வழங்கி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

கரூரில் கடந்த மாதம் 80 அடி சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், கரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என குறிப்பிட்டு இருந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுகவுக்கு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாலமாபுரம் பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





















