விழுப்புரம் : தஞ்சமடைந்த அதிமுக பெண் வேட்பாளர்.. காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்கிய திமுகவினர்..
விழுப்புரம்: திண்டிவனத்தில் உயிருக்கு பயந்து தஞ்சமடைந்த அதிமுக பெண் வேட்பாளரை காவல் நிலையத்திற்குள் புகுந்து திமுகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் : திண்டிவனத்தில் உயிருக்கு பயந்து தஞ்சமடைந்த அ.தி.மு.க பெண் வேட்பாளரை காவல் நிலையத்திற்குள் புகுந்து, திமுக.,வினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி 13வது வார்டில் தி.மு.க.,வில் வழக்கறிஞர் பாபு; அ.தி.மு.க.,வில் சுதா சரவணன் என்பவரும் போட்டியிடுகின்றனர். நேற்று நடந்த வாக்கு பதிவின் போது, பிற்பகல் 2:00 மணியளவில் தி.மு.க - அ.தி.மு.க.,வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், தி.மு.க., வேட்பாளர் பாபுவின் மூக்கு உடைந்தது.
இதையடுத்து, அ.தி.மு.க., வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததால், சுதா, அவரது கணவர் சரவணன், மகன்கள் சத்யா, அசோக்குமார் ஆகியோர் ரோஷணை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.இரவு 8:45 மணிக்கு, தி.மு.க., வேட்பாளர் பாபு தரப்பினர், போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பூந்தொட்டி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். அவர்களை தடுத்த போலீசாரை தாக்கிவிட்டு, அதிமுக., வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்
.
போலீசார் தரப்பில், காயமடைந்த வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரை மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தியும், அவர்கள் பயந்து அங்கேயே இருந்தனர். டி.ஐ.ஜி., பாண்டியன் நேரில் விசாரணை நடத்தினார்.தகவலறிந்து, போலீஸ் நிலையம் முன் அ.தி.மு.க.,வினர் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இரவு 9:50 மணிக்கு அ.தி.மு.க.,வினர், குற்றவாளியை கைது செய்யக் கோரி, ரோஷணை காவல் நிலையம் எதிரே திருவண்ணமாலை பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.எம்.எல்.ஏ., அர்ஜுனன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பிரச்னை செய்ததால் பதற்றம் நிலவியது.
10:05 மணியளவில், சுதா, கணவர் சரவணன் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடிப்படை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரவு 10:40 மணியளவில் முன்னாள் அமைச்சர் சண்முகம் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் டி.ஐ.ஜி பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஸ்ரீநாதா ஆகியோரை ரோஷணை காவல் நிலையத்தில் சந்தித்தனர். அப்போது, காவல் நிலையத்தில் புகுந்து தாக்கியவர்களை கைது செய்யவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்