![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamilnadu Election Voting : நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ..
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மொத்த வாக்காளர்கள், வேட்பாளர்கள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, கடந்த தேர்தல் வாக்கு சதவீதம் ஆகியவற்றை இங்கு காணலாம்.
![Tamilnadu Election Voting : நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ.. Tamil Nadu voters candidates voting percent polling booth details in Lok Sabha Elections 2024 Tamilnadu Election Voting : நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/beecbe6b1674625020356a46cfa58b5d1701349470803102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய நாட்டின் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் நாளை தொடங்க உள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட, 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
தமிழக வாக்காளர்கள் மொத்தம் எத்தனை பேர்?
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் (சுமார் 6.23 கோடி) உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்- 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467 பேர் ஆவர். இதில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் ஆவர்.
20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 1 கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679.
30 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 1 கோடியே 29 லட்சத்து 263.
40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152.
50 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 1 கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484.
60 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 71 லட்சத்து 64 ஆயிரத்து 278.
70 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 38 லட்சத்து 66 ஆயிரத்து 798.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.
வாக்குச் சாவடிகள் எத்தனை?
தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் வாக்களிக்க ஏற்ற வகையில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இந்த 181 வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர். 65% வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
1.30 லட்சம் போலீஸார் பாதுகாப்பு
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 1.3 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தமாக 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் எவ்வளவு?
தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 1,58, 568 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அத்துடன் 81,157 கட்டுபாட்டு இயந்திரங்களும் 86,858 விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
வேட்பாளர்கள் எத்தனை பேர்?
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் அனைத்துக் கட்சிகள், சுயேச்சைகளைச் சேர்த்து மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-874 பேர், பெண்கள்- 76 பேர். மாற்றுப் பாலினத்தவர் ஒருவர் கூட இல்லை. மொத்த வேட்பாளர்களில் 606 பேர் சுயேச்சைகள்.
கடந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு?
2019 மக்களவைத் தேர்தலில், மாநிலம் முழுவதும் 72.47 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒவ்வொரு தேர்தலிலும் மாநகரங்களில் மிகவும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின்றன. சென்னையில் ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை. குறிப்பாக சென்னை மாநகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒருமுறை கூட 70 சதவீத வாக்குகள் எட்டப்படவில்லை.
மார்ச் 27 வரை விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 95 சதவீதம் பூத் சிலிப் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் வாக்களிக்க, தனி அலுவலர் வாக்குச்சாவடி மையத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எப்போது வாக்களிக்கலாம்?
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். மாலை 6 மணிக்குள் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும், 6 மணியைக் கடந்தாலும் முழுமையாக வாக்களிக்கலாம்.
85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து சேவை அளிக்கப்பட உள்ளது. இந்த சேவைக்கு 1950 என்ற எண்ணை அழைத்துப் பேசி முன்பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 67 ஆயிரம் பேர் தபால் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
நேற்று வரை ரூ.173 கோடி ரொக்கம் பறிமுதல்
ஏப்ரல் 17 வரை தமிழ்நாடு முழுவதும் ரொக்கமாக ரூ.173 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)