Tamil Nadu Election Results 2021 Live Updates: டெல்டாவை உல்டாவாக்கிய திமுக
டெல்டாவில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பரவலாக பேசப்பட்டடை உல்டாவாக்கி, டெல்டாவை தன் வசமாக்கியிருக்கிறது திமுக.

திமுக தமிழகத்தில் பெற்ற வெற்றியை மண்டல வாரியாக பார்க்கும் போது தென் தமிழகத்தின் அவர்களுக்கு அதிக அளவில் வெற்றியை கொடுத்த மண்டலமாக டெல்டா உள்ளது. டெல்டா மண்டலத்தில் வரும் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் திமுகவின் கூட்டணி கட்சிகள் 7 இடங்களில் போட்டியிட்டனர். மற்ற அனைத்து இடங்களிலும் திமுக நேரடியாக போட்டியிட்டது.
திருச்சி,கரூர்
அதில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளையும் அப்படியே அள்ளியது திமுக. முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பின் வெற்றியை பதிவு செய்திருக்கிறது திமுக. கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு தொகுதிகளான குளித்தலை, அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதிகளை திமுக மொத்தமாக அள்ளியது.
பெரம்பலூர், அரியலூர்
டெல்டாவில் வரும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகள் உள்ளன. பெரம்பலூரில் பிரபாகரன், குன்னத்தில் சிவசங்கர், ஜெயங்கொண்டத்தில் கண்ணன், அரியலூரில் மதிமுக சின்னப்பா ஆகியோர் வெற்றி பெற்று ஒட்டுமொத்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை அப்படியே திமுக வசமாக்கினர். கடந்தமுறை இந்த நான்கு தொகுதிகளுமே அதிமுக வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாகை, திருவாரூர்
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் நாகையில் விசிகவின் ஆளுர் ஷநவாஸ், கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளனர். வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் வெற்றி பெற்றாலும், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறை பூண்டி உள்ளிட்ட பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்று நாகை மற்றும் திருவாரூர் தொகுதியை திமுக வசமாக்கினர்.
புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை
டெல்டாவின் பிற பகுதிகளைப் போலவே புதுக்கோட்டையில் திமுக தனது வெற்றியை பதிவு செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தவர்கோட்டையில் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட சின்னதுரை, அறந்தாங்கியில் காங்கிரஸ் சார்பில் ராமசந்திரன், தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் மமக ஜாவாஹிருல்லா, திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து ஆகியோர் வெற்றி பெற்று திமுகவின் எண்ணிக்கை அதிகரிக்க உதவினர். புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை வெற்றி பெற்றன.
இந்த வெற்றியின் மூலம் டெல்டா மண்டலத்தை தன்வசமாக்கியிருக்கிறது திமுக.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

