Sriperumbudur: ஸ்ரீபெரும்புதூரில் களம் எப்படி உள்ளது ? - தேர்தல் முடிவுகள் எப்பொழுது தெரியும் ? சாதகம் யாருக்கு ?
Sriperumbudur Lok Sabha Constituency Result 2024: இந்த தேர்தலை பொருத்தவரை திமுக - அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே போட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 04.062024 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள Madras Institute of Technology கல்லூரியில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரேம்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால், நாம் தமிழர் வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான போட்டி திமுக - அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு இடையே உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 36 ஆயிரத்து 25 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையம் சென்னை குரோம்பேட்டை எம். ஐ .டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு 12 ரூம்கள் அமைக்கப்பட்டு, 4,874 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுகள் எத்தனை ?
சட்டசபைத் தொகுதிகள் | மொத்தம் எத்தனை சுற்றுகள் |
தாம்பரம் | 31 |
பல்லாவரம் |
32 |
ஸ்ரீபெரும்புதூர் | 28 |
ஆலந்தூர் | 29 |
அம்பத்தூர் | 25 |
மதுரவாயில் | 33 |
மொத்தம் | 178 |
தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொகுதி மற்றும் அதிக சுற்றுகள் உள்ளதால் இரவு நேரங்களில் முழுமையான முடிவுகள் தெரிய வரும் என கணிக்கப்பட்டுள்ளது. உள்ளே வாக்குவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால், முடிவுகள் தெரிய வர அடுத்த நாள் காலை கூட ஆகலாம்.
2019 தேர்தல் முடிவு நிலவரம் ?
2019 ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் :
- திமுக கூட்டணி வேட்பாளர் டி. ஆர். பாலு - 793,281 - 56.53% வாக்குகளை பெற்றார்
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் - 2,85,326 - 20.33% வாக்குகளை பெற்றார்
- மக்கள் நீதி மைய வேட்பாளர் ஸ்ரீதர் - 1,35,525- 9.66% வாக்குகளை பெற்றார்
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன்- 84,979 - 6.06%
- அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் - 41,497 2.96%
டி.ஆர். பாலு 5,07,955 - 36.20% வாக்குகள் கூடுதலாக பெற்று அபார வெற்றியை பெற்று இருந்தார்.
பிரச்சாரத்திற்கு ஓடோடி வந்த தலைவர்கள்
திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன், பாரதி ஜனதா கட்சி தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2024 களம் எப்படி உள்ளது ?
இந்த தேர்தலை பொருத்தவரை திமுக - அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே போட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தொகுதியில் கடந்த முறை பல லட்சம் வாக்குகளில் வெற்றி பெற்ற டி.ஆர்.பாலு மீண்டும் தக்க வைப்பாரா? ஸ்ரீபெரும்புதூர் திமுக கோட்டை என்று மீண்டும் நிரூபிக்கப்படுமா ? அல்லது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுகவின் முக்கிய தலைவர் டி.ஆர்.பாலு போட்டியிடுவதால் இந்த தொகுதி தனி கவனம் பெற்று இருக்கிறது என்றே சொல்லலாம்.