ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆயத்தமாகும் இந்தியா? என்னென்ன பலன்கள்? - ஜனாதிபதி கையில் 18,626 பக்க அறிக்கை கொடுத்த ராம்நாத்!
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல கட்டங்களாகவும், பல்வேறு அமைப்புகளிடமும் நடத்திய கருத்துக் கணிப்புகள் அடங்கிய 18 ஆயிரத்து 626 பக்க அறிக்கையை ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் நாட்டிற்கு பல வழிகளில் பலன்கள் ஏற்படும் எனவும் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆய்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியில் இருந்து மொத்தம் 191 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் இறுதியில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதால் நாட்டை தேர்தல்களால் அடிக்கடி ஏற்படும் பொருளாதாரம் மற்றும் சமூக இடையூறுகளில் இருந்து காப்பாற்ற உதவும் என பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடாளுமன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ ஆட்சி கவிழும் நிலை வந்தால் அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதுமட்டுமில்லாமல் நம்பிக்கையில்லா தீர்மானம், கட்சி தாவல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் வந்தாலும் எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளையும் பரிந்துரைகளாக வழங்கியுள்ளது.
அந்த தீர்வில் மாநிலத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக ஆட்சி கலைக்கப்பட்டால் அந்த மீதியுள்ள பதவிகாலத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தலாம் என குழு பரிந்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் கோவிந்த் தலைமையிலான குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணையத் தலைவர் என்.கே. சிங், முன்னாள் மக்களவைச் செயலாளர் ஜெனரல் சுபாஷ் காஷ்யப் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தலாம் என்பதில் குழு ஆதரவாக செயல்படுவதாகவும் இந்த ஆய்வு வெறும் கண் துடைப்பு எனவும் கூறி ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாகவே இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குழுவில் இருந்து விலகினார்.
இந்தியாவில், தற்போது மத்தியிலும் மாநிலங்களிலும் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையும் போது அல்லது சில காரணங்களால் அது கலைக்கப்படும் போது, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்கள் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.
ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்த 22வது சட்ட ஆணையம், 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவை என்று பல மேடைகளில் பேசியுள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தனது வாக்குறுதிகளிலும் தெரிவித்திருந்தது.