(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi: ஆட்சி வேண்டாம்..! எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி - I.N.D.I.A. கூட்டணி ஆலோசனை
Raul Gandhi: நாடாளுமன்ற மக்களவைக்கான எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது குறித்து, I.N.D.I.A. கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
Raul Gandhi: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
I.N.D.I.A. கூட்டணி ஆலோசனை:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பன்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேநேரம், அந்த கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரை இழுத்து, I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடும் எனவும் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி?
கூட்டத்தில் தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என, எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், விருப்பமுள்ள கட்சிகள் I.N.D.I.A. கூட்டணிக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம், எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்துள்ளனர். அதன்படி, ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய பலரும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. I.N.D.I.A. கூட்டணியை பெருமளவில் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தது, கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெல்ல முக்கிய பங்காற்றியது போன்ற காரணங்களால், ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
I.N.D.I.A. கூட்டணி வெற்றி விவரங்கள்:
I.N.D.I.A. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று, தவிர்க்க முடியாத கூட்டாளியாக உள்ளது. அதைதொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் சமஜ்வாதி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், திராவிட முன்னேற்ற கழகம் 22 இடங்களிலும், ராஷ்ட்டிய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதுபோக கம்யூனிஸ்ட் கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்டோர் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
தனிப்பெரும் கட்சி பாஜக:
பாஜக மட்டும் அதிகபட்சமாக 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனாலும், தனிப்பெரும்பான்மைக்கான 272 இடங்களை விட, 32 இடங்கள் பின்தங்கியுள்ளன. இதனால், கடந்த இரண்டு மக்களவை தேர்தலை போன்று இல்லாமல், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது. அமைச்சரவையில் எந்த கட்சிக்கு எந்தெந்த துறைகளை ஒதுக்குவது என்று தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதைதொடர்ந்து, வரும் 8ம் தேதி மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.