Perambur: தவியாய் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்.. திலகபாமா கொடுத்த வாக்குறுதி.. விஜய்க்கு ஆப்பா?
தமிழ்நாடு முழுவதும் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் தொகுதியில் இன்று ஆட்டோ ஓட்டுநர்களை திலகபாமா குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெரம்பூர் தொகுதியில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை அங்கு பாமக சார்பில் போட்டியிடும் திலகபாமா சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சூடுபிடிக்கும் பெரம்பூர் தொகுதி
ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெரம்பூர் தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. அங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பாமகவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு திலகபாமா களமிறங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தவெக சார்பில் விஜய் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கேஸ் தட்டுப்பாட்டால் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் இடங்களிலும் பல கிலோ மீட்டருக்கு ஆட்டோக்கள் வரிசையாக நிற்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற மக்கள் பாதிப்பு வாக்களிப்பில் அதிர்வலையை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.திலகபாமா இன்று காலை தனது பரப்புரையை தொடங்கினார். அப்போது வியாசர்பாடியில் உள்ள எம்.கே.பி. நகரில் பெட்ரோல் பங்கில் ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது கேஸ் தட்டுப்பாடு காரணமாக தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோவிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக தினமும் 3 மணி நேரம் வரை காத்துக்கிடக்க வேண்டியுள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, மேற்காசிய போர் காரணமாக எரிபொருள் போக்குவரத்து முடங்கியுள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு நிலைமை இப்படியே நீடிக்கும் என ஆட்டோ ஓட்டுநர்களிடம் திலகபாமா நிலைமையை எடுத்துரைத்தார். மேலும் கொரோனா காலத்தைப் போல நமக்குள் நாமே உதவிக்கொண்டு இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தங்கள் வருமானம் பாதிக்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்களிடம், தினசரி உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பாதி அளவிற்காவது அரசு உதவினால் நன்றாக இருக்கும். அதற்கான நடவடிக்கைகளை நான் கண்டிப்பாக மேற்கொள்கிறேன் என உறுதியளித்தார். என்னை எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து உங்களது குறைகளை தெரிவியுங்கள், உடனடியாக அதற்கான தீர்வு கிடைக்க உதவுகிறேன் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பெரம்பூர் தொகுதியில் வாழும் ஆட்டோ ஓட்டுநர்களில் மிகவும் கஷ்டப்படுகிற 200 ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்கிறேன் என உறுதியளித்தார். மேலும் இரவு நேரங்களில் கேஸ் நிரப்புவதற்காக வரிசையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் காவல்துறையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் திலகபாமா வாக்குறுதி அளித்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் திமுக vs பாமக என்ற நிலை உருவாகியுள்ளது. ஆர்.டி.சேகர், திலகபாமா போன்றோர் தீவிர பரப்புரை மேற்கொள்ளும் நிலையில் விஜய் இந்த தொகுதிக்கு ஒருமுறை மட்டுமே வருகை தந்துள்ளார் என்பது அவருக்கு பின்னடைவாக அமையும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்



















