PMK Manifesto: பா.ம.க. தேர்தல் அறிக்கை:ராமதாஸ், அன்புமணி முன்னிலையில் நாளை வெளியீடு
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (27.03.2024) புதன் கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
பா.ம.க. தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (மார்ச் 27) வெளியிடப்பட உள்ள நிலையில், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் பாமக
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. எப்போதும்போல நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (மார்ச் 27) முடிவடைய உள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் நேற்றே (மார்ச் 25) வேட்புமனுத் தாக்கலை முடித்து விட்டனர். பிரச்சாரமும் சூடுபிடிக்க நடைபெற்று வருகிறது.
நாளை தேர்தல் அறிக்கை வெளியீடு
இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆளும் திமுக, எதிர்க் கட்சியான அதிமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாமகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (27.03.2024) புதன் கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும், கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸும் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
என்னென்ன அம்சங்கள்?
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர் முகாமில் இந்தியா கூட்டணியில் இருக்கிறது திமுக. இரண்டு கூட்டணிகளிலும் இல்லை என்று கூறி அதிமுக வாக்கு சேகரித்து வருகிறது. இரு கட்சிகளைத் தாண்டி, பாஜக கூட்டணியில் பாமக உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளாக என்னென்ன அம்சங்களை பாமக குறிப்பிட்டிருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
தர்மபுரியில் போட்டியிடும் செளமியா அன்புமணி
பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் பாஜக களம் காண்கிறது. இந்த நிலையில், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி, செளமியா அன்புமணி வேட்பாளராகக் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.